குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு

கிருஷ்ணகிரி, டிச.20: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட பந்தலூரில் குவாரியும், கொண்டப்பநாயனப்பள்ளியில் ஜல்லி கிரஷரும் செயல்பட்டு வருகிறது. குவாரியில், வெடிகள் வைத்து கற்கள் எடுக்கும்போது, அருகில் உள்ள விவசாய நிலத்திலும், வீடுகள் மீதும் கற்கள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல், கால்நடைகள் மீதும் விழுந்து வருகிறது. அனுமதியளிக்கப்பட்ட அளவினை காட்டிலும், பெரிய அளவில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கிருந்து எடுக்கப்படும் கற்கள் லாரிகள் மூலம் அருகில் உள்ள ஜல்லி கிரஷர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் சாலை முழுவதும் தூசி பறப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்படுகிறது. அங்கு ஜல்லிகற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை தயாரிக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் துகள்கள், புகை முழுவதும் நிலங்களில் உள்ள நெல், வாழை, மலர் தோட்டங்கள், தென்னை உள்ளிட்டவையில் படர்வதால், மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்து வருகிறோம். இதே போல், கால்நடைகளுக்கு வைக்கப்படும் தீவனங்களில், வீட்டில் சமைத்து வைக்கப்படும் உணவு பொருட்களிலும் தூசு படர்கிறது. இதன் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறோம். அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் குவாரி மற்றும் ஜல்லிகிரஷரில் மாவட்ட கனிமவளத்துறை, சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: