×

அனுமன் ஜெயந்தியும்… வைகுண்ட ஏகாதசியும்…

அனுமன் ஜெயந்தி (19.12.2025) – வைகுண்ட ஏகாதசி (30.12.2025)

முத்துக்கள் முப்பது

1. முன்னுரை

மார்கழி மாதம் மாதங்களில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வழிபாட்டுக்கு உரியதுதான் என்றாலும், ஒரு மாதம் முழுமையும் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கும் மாதம், மார்கழி மாதம். இந்த மார்கழி மாதத்தில்தான் எத்தனை விசேஷங்கள்? எத்தனை உற்சவங்கள்? தனுர் மாத பிறப்பு என்று ஆரம்பிக்கும் மார்கழி மாதம் பொங்கலுக்கு முதல் நாளாகிய போகிப்பண்டிகையுடன் நிறைவு பெறுகிறது. இந்த மார்கழி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாள் விழா நடக்கிறது.

அனுமன் ஜெயந்தி விழா வருகிறது. தில்லையில் நடராஜனின் மார்கழி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவரங்கம் முதலிய திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. திருவையாறு தியாகராஜ உற்சவம் நடைபெறுகிறது. இப்படிப் பல உற்சவங்களும் விழாக்களும் நிறைந்த மார்கழி மாதத்தின் முதல் பகுதியில் வருகின்ற அனுமன் ஜெயந்தி பற்றியும் வைகுண்ட ஏகாதசி பற்றியும் முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.

2. அனுமன் ஜெயந்தி

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி (19.12.2025 -மார்கழி, 4-வெள்ளிக்கிழமை, அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணைந்த நாளில்) அமைகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவம் 30.12.2025 செவ்வாய்க் கிழமை வருகிறது. வைணவத்தில் மார்கழி மாதத்தில் திருப்பாவை மாதம் என்று சொல்லும் வழக்கம் உண்டு. அந்த அடிப்படையில் திருப்பாவையில் நான்காம் நாள் ஆழிமழைக் கண்ணா என்ற பாசுரம் சேவிக்கும் நாள்.

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

இதில்(பாசுரத்தில்) என்ன சிறப்பு என்று நீங்கள் கருதலாம். ஆழிமழைக் கண்ணா என்ற பாசுரம் மழை தேவதையை (வருணனை)அழைத்து, இந்த உலகத்தில் வாழ்வதற்காக நீ பெய்ய வேண்டும் என்று வேண்டுவதாக வருகிறது.இதனால் மழைக்கு எந்த லாபமும் இல்லை. அதைப்போலவே ஆஞ்சநேய பகவான் தன்னுடைய அவதாரத்தின் நோக்கம் முழுமையும், தனக்காக இல்லாமல் இந்த உலகத்துக்காக ஒப்படைத்தார் என்பதால், நான்காம் பாசுரம் நாள் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்திக்கு மிகவும் பொருத்தமான நாளாக இருக்கிறது.

3. அனுமன் இல்லாத ஊரா?

நம்முடைய சமய மரபில் இரண்டு தெய்வங்களுக்கு ஊரெங்கும் கோயில்கள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தெருவிலும் கோயில்கள் என்று சொல்லலாம்.

* விநாயகர்.
* ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர் இருக்காது தென்னகத்தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதுமே ஆஞ்சநேயருக்கு ஏராளமான கோயில்கள் உண்டு. ஸ்மார்த்த சம்பிரதாயத்திலும், மாத்வ சம்பிரதாயத்திலும் , வைஷ்ணவ சம்பிரதாயத்திலும், அனுமனுக்கு சிறப்பான இடம் உண்டு. வைணவ மரபில் திருவடி என்றாலே அனுமனைத் தான் குறிக்கும். பெரிய திருவடி என்பது கருடனைக் குறிக்கும். பகவத் தாசர்களை திருவடிகள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ராமதாசனான அனுமனை திருவடி என்று சொல்வது எத்தனைப் பொருத்தம்!

4. அனுமன் யார்?

திரேதாயுகத்தில் சுமேரு என்ற மலைப்பிரதேசத்தில் வானரர்களுக்குத் தலைவன் ஒருவன் அரசாண்டு வந்தான். அவனுக்கு வெகு காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. சிவ பெருமானின் பேரருளால் ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு அஞ்சனாதேவி என்று பெயர் வைத்தான். தக்க பருவத்தில் கேசரி என்ற வானர வீரனுக்கு மணம் முடித்து வைத்தான். அஞ்சனா தேவிக்குக்கும் வெகு காலம் குழந்தைச்செல்வம் இல்லை. அவள் திருமலைக்குச் சென்று ஆகாய கங்கையில் நீராடி ஐம்புலன்களையும் அடக்கி திருமாலை நோக்கி நீண்ட தவம் இருந்தாள். அந்த தவத்தின் விளைவாக வாயுவின் அம்சத்தோடு அஞ்சனை மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண் மகவைப் பெற் றெடுத்தாள். அஞ்சனையின் குமரன் என்ற பொருளோடு ஆஞ்சநேயர் என்று திருநாமம் இட்டனர்.திருமலையின் ஏழு மலைகளில் ஒன்று அஞ்சனாத்ரி.

5. வெவ்வேறு நாளில் அனுமன் ஜெயந்தி

தென்னகத்தில் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் தான் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் அனுமன் ஜெயந்தி, சித்திரை மாதம் பௌர்ணமியில் கொண்டாடப்படுகிறது. நம்முடைய சமய மரபில் கர்ப்பஉற்சவம், ஜனன உற்சவம் என்று இரண்டு வகையாக ஜெயந்தி உற்சவத்தைக் கொண்டாடுவார்கள். அந்த அடிப்படையில் அனுமனின் கர்ப்ப உற்சவம்சித்திரை மாதம் பௌர்ணமி. அனுமனின் அவதார உற்சவம் மார்கழி அமாவாசை. வட நாட்டில் வைசாக பௌர்ணமியை அடுத்து செவ்வாய்க்கிழமையில் அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

6. அனுமன் பெயர்கள்

அனுமனுக்கு பல நாமங்கள் உண்டு. பெரும்பாலும் இவை காரணப் பெயர்கள். அஞ்சனையின் வயிற்றில் பிறந்ததால் ஆஞ்சநேயன். தாடை ஒடுங்கி போனதால் ஹநுமான். மாருதம் எனும் காற்றின் மைந்தனுக்குப் பிறந்ததால் மாருதி. சஞ்சீவி மலையைத் தூக்கி வந்ததால் சஞ்சீவிராயன். மருந்து மலையை சுமந்து வந்ததால் கந்த வாஹன் . ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக சுந்தரகாண்டத்தின் கதா நாயகனாக விளங்குவதால் சுந்தரன். எல்லா காலத்திலும் விளங்குவதால் சிரஞ்ஜீவி. பெருமாளுக்கு வாகனமாக விளங்குவதால் திருவடி.

7. அனுமன் ராமாயணம்

வால்மீகி ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறினார் . அங்கே பாறைகளின் மீது சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்த அவற்றைப் படித்த வால்மீகிக்கு மெய் சிலிர்த்தது. யார் இதை உருவாக்கியிருப்பார்கள் என்று சிந்தித்த போது அருகிலே ஓர் சிறு குகையில் அனுமன் ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டிருந்ததைக்கண்டார். நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்த அவரிடம், கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.அதற்கு அனுமன் பதில் சொன்னார், ”ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன்!” என்றார்.

அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். ”மஹாப்ரபோ ! நீர் எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. நான் எழுதிய ராமாயணம் இதற்கு இணையாகாது. உம்முடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்” என்றார். அனுமன் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வால்மீகியை வணங்கி, ”தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! நான் செதுக்கியது என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தங்கள் ராமாயணம் தான் நிலைத்து நிற்கும்.”அடுத்து அனுமன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தார். தான் எழுதிய ராமாயணத்தை வாலினால் அழித்தும் விட்டார்.வான்மீகி வியந்து போனார்.என்ன ஒரு தியாகம்…. ”அனுமனே ! நீர் எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டீர் . ஆனால், எமது ராம காவியத்தில் நீர் செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்” என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.

8. அனுமனை வரவழைப்பது எப்படி?

அனுமனைக் காண்பதும் வரவழைப்பதும் மிக எளிதான காரியம்தான். அவரை வரவழைக்க வேண்டும் என்று சொன்னால், ராம நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ராமாயணத்தைச் சொல்லும்பொழுது அதனைக் கேட்பதற்கு ஆஞ்சநேயர் வருவார் என்பதற்காக அவருக்கு ஒரு மனைப் பலகை போட்டு, விளக்கு ஏற்றி வைத்து, உபசாரங்களைச் செய்து வைப்பார்கள். அவர் எந்த உருவில், எப்படி வந்து கேட்பார் என்பதை சொல்லவே முடியாது ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக அவர் வந்து அமர்ந்து கேட்பார். இதனைக் கீழ்க்காணும் சுலோகம் மிக அழகாகச் சொல்கிறது.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமது ராக்ஷஸாந்தகம்

9. சிவனுடைய அம்சம்

அனுமனை ருத்ராம்சம் என்று சொல்வார்கள். இதற்குச் சான்று கம்பராமா யணத்தில் ஒரு பாடல் அந்தப் பாடல் இது.

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விட, “தனி அருளு தாழ் சடைக் கடவுள் என”,
‘இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்’ என்று இடை உதவி,

இதில் அனுமனை, தனி அருளு தாழ் சடைக் கடவுள் என”என்று பாடுகிறான் கம்பன்.பாற்கடலைக் கடைந்தபோது உண்டான கொடிய விஷத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சத் தொடங்கியபோது அவர்கள் அச்சம் நீங்கும்படி அந்த நஞ்சை உண்ட சிவபெருமானைப் போல அநுமன் சுக்ரீவன் மற்றும் வானரர்களின் அச்சத்தை நீக்கினார், என்று கூறும் பாடலில் ,சிவனுடைய அம்சமாக அனுமன் அவதரித்தார் என்கின்ற செய்தியை கம்பன் சுட்டிக்காட்டுகின்றான்.

10. அனுமனின் சுய அறிமுகம்

இராமன் அனுமனைப் பார்த்து “நீ யார்?” என்று கேட்கிறான்.
மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான்காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்;

இந்தப் பாடல் நாலு வரி. ஆனால் மூன்று வரியில் இராமரின் அழகு, ஆற்றல், தோற்றம் பற்றி கூறுகிறார். கடைசி வரியில் “காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன் என்று சுருக்கமாகக் கூறுகிறார். நம்மைப் பற்றி சொல்லுகின்ற பொழுது எதிரிலே இருக்கிற பெரியவர்களின் பெருமையையே முதன் மையாக பேசிவிட்டு, பிறகு நம்மைப் பற்றிய குறிப்பை எந்தவித தற் புகழ்ச்சியும் இல்லாமல் அடக்கமாகச் சொல்ல வேண்டும் என்பது அனுமன் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

11. அனுமன் காண்டம்

ராமாயணம் ஏழு காண்டங்களைக் கொண்டது . 1.பால காண்டம் 2.அயோத்தியா காண்டம் 3.ஆரண்ய காண்டம் 4. கிஷ்கிந்தா காண்டம் 5.சுந்தர காண்டம் 6. யுத்த காண்டம் 7. உத்தர காண்டம். இதில் சுந்தர காண்டம் அனுமன் பிரபாவத்தைக் கூறுவது. ராவணன் மறைத்து வைத்த சீதையை அசோக வனத்தில் கண்டுபிடித்து ராமரிடம் கண்டேன் சீதையை என்று கூறி மகிழ்ச்சியைத் தந்த காண்டம் சுந்தர காண்டம். இழந்த பொருளைப் பெற்றுத்தரும் காண்டம் சுந்தர காண்டம். நாம் இழந்தது எதுவாகினும், அது மகிழ்ச்சியோ, பொருளோ, உறவோ , அதனை மீட்டுத் தரும் காண்டம் சுந்தர காண்டம் என்பதால், கஷ்டம் வருகின்ற காலத்தில் சுந்தர காண்ட பாராயணம் மூலம் நிவாரணம் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதில் சுந்தரன் என்கிற சொல் அனுமனைக் குறிக்கும்.

12. சுந்தரா வா

முதலில் வால்மீகி ஐந்தாவது காண்டமாகிய ராமாயணப் பகுதிக்கு அனுமத் காண்டம் என்றுதான் பெயர் சூட்டினார். காரணம் அது அனுமனின் சிறப்புக்களையே முழுக்க முழுக்கச் சொல்வது. அந்தக் காண்டத்தில் மற்ற பாத்திரங்கள் வந்தாலும் அது அனுமனுடைய வீர தீர பிரதாபத் தையும், பக்தியையும், சாமர்த்தியத்தையும், புத்திக்கூர்மையையும்,, சீதையைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளையும் சொல்வது. ஆனால், தன்னுடைய பெயர் இந்தக் காண்டத்துக்கு சூட்டப்படுவதை அனுமன் விரும்பவில்லை.

உடனே வால்மீகி மாற்றுப் பெயராக சுந்தர காண்டம் என்று சூட்டி ராமாயணத்தை நிறைவு செய்தார். ராமாயண அரங் கேற்றத்தை முடித்துக்கொண்டு தாய் அஞ்சனாதேவியைப்பார்க்க திருமலைக்கு அனுமன் சென்றார். அனுமனை வரவேற்ற தாய் அஞ்சனாதேவி,” வா, சுந்தரா, நலம்தானே ?”என்று அழைத்தபோதுதான், தனக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதை அறிந்து கொண்டார்.வான்மீகி முனிவர் சாதுரியமாக எப்படியோ தன் பெயரை ஐந்தாவது காண்டத்திற்கு சூட்டி விட்டாரே என்று நினைத்தாராம்.

13. ராம நாமம்

ராமாயணத்தின் மொத்த பெருமையும் ராம என்ற இரண்டு எழுத்து நாமத்தில் அடங்கியிருக்கிறது. இந்த ராம நாமத்தின் பெருமை முதல் முதலில் செயல்படுத்தி வெளி உலகிற்கு தெரிவித்தவர் அனுமன். இலங்கைக்கு கடல் வழியே சென்ற பொழுது பல்வேறு தடைகள் வந்தன. அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்தெறிய அனுமன் பயன்படுத்தியது ராமநாமத்தை என்பதை கம்பன் குறிப்பிடுகின்றார்.

அசோகவனத்தில் சீதைக்கு தினம் தினம் தொல்லைதான். துன்பத்தைப் பொறுக்க முடியாத சீதை, இனி வேறு வழியில்லை; உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அங்கிருந்த ஒரு மரத்தின் கிளையில், கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு சாகத் துணியும் போது, அவளைக் காப்பாற்றியது ராம நாமம்தான் . அதனால்தான் தியாகராஜர் “ராமநாமம் ஜன்ம ரட்சக மந்திரம்” என்றார்.அனுமன் சீதைக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னால் ராமனின் நாமம் தான் சீதைக்கு அறிமுகமாகியது. அதனால் அவள் சாகத் துணிந்த தன் முடிவை மாற்றிக்கொண்டு வாழத் துணிந்தாள்..

14. அனுமன் தூது

சுந்தர காண்டத்தில் உள்ள சிறப்பான பகுதி அனுமன் தூது. இது நேரடியாக தூது என்ற அமைப்பில் இருக்காது. ஆனால் தூதுக்குரிய அத்தனை இலக்கணங்களும் இருக்கும். “முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன். மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து” என்று இந்தத் தூது நிகழ்ச்சியை ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றார்கள். இன்னும் சொல்லப்போனால், அனுமன் தூது எப்படி விசேஷமாக இருந்தது என்பதை பகவான் அறிந்து கொண்டு, அடுத்த அவதாரமாகிய கண்ண னுடைய அவதாரத்தில் தானும் தூதுவனாகச் செல்ல வேண்டும் என்று விரும்பி தூது சென்றாராம்.. இராமன் அனுமனை “தூது செல்” என்று சொல்லி அனுப்ப வில்லை. ஆனால் ஒரு தூதனுக்குரிய அத்தனைவேலை களையும் அனுமன் செய்கிறார்.

15.பேராற்றல் பெற்றவன்

அனுமனை பேராற்றல் பெற்றவன் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அனுமனை வணங்குபவர்களுக்கும் அத்தகைய அறிவாற்றல் கிடைக்கும். (அதாவது அறிவும் ஆற்றலும் கிடைக்கும்.) காரணம் இவை இரண்டும் இருந்தால் தான் செயல் வெற்றி பெறும்.

அசாத்ய சாதக ஸ்வாமிந் | அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ | மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். செவ்வாய் கிழமைகளில் அனுமன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து மேலே உள்ள மந்திரத்தை 27 முறை கூறுவதன் பயனாக தடைப்பட்ட காரியம் விரைவில் முடியும்.

16. சஞ்சீவிராயர்

மாய அஸ்திர பிரயோகங்களால் சற்றுநேரம் ராம லஷ்மணர் உட்பட வானரர்கள் அடிபட்டு மயக்கமுற்று இருந்த வேளையில், “எல்லாம் போயிற்று” என்று வீடணன் போன்றோர் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது, ஜாம்பவான்,” அனுமன் இருக்கிறாரா?” என்று கேட்கிறார். அப்போது அனுமன் அவர் அருகில் வருகின்றார். அவரை ஆசிர்வதித்து “அப்பா, நீ ஒருவன் இருக்கின்றாய் என்று சொன்னால் நாம் அத்தனைபேரும் இருக்கின்றோம் என்று பொருள்” என்று சொல்லி, உடனே சில மூலிகைகளின் பெயர்களைச் சொல்லி அனுப்புகின்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த மூலிகையைத் தேட அவகாசம் இல்லாத அனுமன், மலையைத் தூக்கிக் கொண்டு வருகின்றார். அனுமனுக்கு சஞ்சீவிராயர் என்று ஒரு பெயர். காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற பகுதிகளில் ஐயங்கார்குளம், நல்லான்பிள்ளைபெற்றாள் போன்ற இடங்களில் சஞ்சீவிராயர் என்ற பெயரில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. இந்தத் தலங்களில் அவர், மூலிகைச் செடிகள் நிறைந்த மலையிலிருந்து வந்ததால், மூலிகை குணங்கள் கொண்டவராக வணங்கப்படுகிறார்.

17. ஏன் வடை மாலை?

ஒரு கிரகண நேரத்தில் சூரியனுக்கு அருகில் சஞ்சரித்து அவரிடம் பாடம் கேட்ட அனுமனின் ஆற்றலை அறிந்த ராகு, அனுமனுக்கு ஓர் உறுதி மொழி கொடுத்தாராம் . ராகுவின் தானியமான உளுந்தால் வடை செய்து, அதனை மாலையாக எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி வழிபடுகிறார்களோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பிடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகி விடும் எனவும் உறுதி கொடுத்தாராம்.இந்த நம்பிக்கையில் உளுந்தால் வடை செய்து அவற்றை 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள். வட நாட்டில் உளுந்தால் செய்யப்பட்ட ஜாங்கிரி மாலை போடுகிறார்கள்.

18. ஏன் செந்தூரம், வெற்றிலை மாலை?

சீதை அசோகவனத்தில் அனுமன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வெற்றித் திலகம் இட்டாள் என்று ஒரு செவி வழிக் கதை உண்டு. சிந்தூரத் திலகத்தை யாரெல்லாம் அனுமனுக்கு இடுகிறார்களோ அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருவான் அனுமன். ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் அருமனுக்கு சிந்துரம் அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது. வெற்றிலை என்பது வெற்றி தரும் இலை.

அனுமனுக்கு வெற்றிலை மாலை மற்றும் ராமநாமம் எழுதிய மாலை முதலியவற்றைச் சாற்றி வழிபடுகின்றனர். காரிய சித்திக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதை பலரும் நம்பிக்கையோடு செய்து வருகின்றனர். இராம அவதாரத்தை முடித்துக் கொண்டு, தன்னுடைய ஜோதிக்கு ராமன் புறப்படும்போது அனுமனையும் வைகுண்டத்திற்கு அழைக்கிறார். இந்த உலகத்தில் ராம நாமம் இருக்கும் வரை, தான் இருப்பேன் என்று அனுமன் சொல்லிவிட்டார். அதனால் சிரஞ்சீவியாக எல்லா யுகங்களிலும் அனுமார் இந்த பூவுலகத்தில் தங்கி நம்மை ஆசீர்வதிக்கிறார்.

திவ்ய நாம சங்கீதத்தில் அனுமனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரே தம்புரா வைத்து கொண்டு ராம நாம பஜனை செய்து கொண்டிருக்கிறார். பஜனை சம்பிரதாயத்தில் தோடய மங்களம், விநாயகர் துதி என்று ஆரம்பித்து , அனுமனைப் பாடி முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கணபதி பூஜையில் ஆரம்பித்து அனுமார் பூஜையில் முடிப்பதால், பிள்ளையார் பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொலவடை பிரசித்தம் ஆயிற்று. இனி மார்கழியின் அடுத்த பிரசித்தி பெற்ற உற்சவமான வைகுண்ட ஏகாதசி பற்றிப் பார்ப்போம்.

19. வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்கள் அனுஷ்டிக்கும் மிகவும் புனிதமான விரதமாகும். இந்த நாளில், வைகுண்ட துவாரம் திறக்கப்படுகிறது. ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மோட்சம் செல்வார்கள். எனவே, இது முக்கோடி ஏகாதசி மற்றும் ஸ்வர்க ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 30, 2025. வைகுண்ட ஏகாதசி வருகிறது. பத்ம புராணத்தின்படி, விஷ்ணு முரன் என்ற அரக்கனுடன் சண்டையிட்டார், சண்டையின்நடுவில், ஓய்வெடுக்கவும், அசுரனைக் கொல்ல ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கவும் ஒரு குகைக்குச் சென்றார்.

விஷ்ணு ஓய்வெடுக்கும் போது,​அசுரன் முரன் குகையில் அவனைக் கொல்ல முயன்றான். இருப்பினும், அவனது முயற்சிகள் தோல்வியடைந்தன, விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட பெண் வடிவிலான சக்தி , அவனைக் கொன்றது. விஷ்ணு அவளை ஏகாதசி என்று அழைத்தார். அவர் ஏகாதசிக்கு ஒரு வரத்தையும் கொடுத்தார். ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று அவள் கேட்டாள். விஷ்ணு அவளுக்கு அந்த வரத்தை அருளினார்.

20. அசுரர்களுக்கும் மோட்சம் தந்த ஏகாதசி

திருமால் ஹயக்ரீவராக அவதரித்து, மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. மதுகைடபர்கள் பெருமாளிடம் தங்களுக்கு வைகுண்டம் தருமாறு பிரார்த் தனை செய்தனர். அவர்களிடம் பகவான்,” மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உங்களுக்கு மோட்சம் தருகின்றேன்” என்று வாக்களித்தார். மார்கழி மாச ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாசல் கதவைத் திறந்து மது கைடபர்களை உள்ளே அனுமதித்தார். மதுகைடபர்களுக்கு வைகுண்டம் தந்த ஏகாதசி என்பதால் “வைகுண்ட ஏகாதசி”.

21. நீண்ட விழா

வைகுண்ட ஏகாதசி வைணவ மரபில், குறிப்பாக திருவரங்கம் முதலான கோயில்களில் திருமொழி திருவாய்மொழி உற்சவமாகக் கொண்டாடப் படுகிறது. குறிப்பாக நம்மாழ்வாரின் பாசுரங்களின் மயங்கிய எம்பெருமான், அவருக்கு தன்னுடைய பரமபதத்தைத் தருகின்ற விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி 22 நாட்கள் நடக்கக்கூடிய பெரு விழா. பொதுவாக கோயில்களில் பிரம்மோற்சவம் என்பதுதான் பெரு விழாவாக 10 நாட்களுக்குக் குறையாமல் நடைபெறும். ஆனால் 22 நாட் நீண்ட விழாவாக நடைபெறுவது வைகுண்ட ஏகாதசி திரு விழா. இந்த விழா எப்படித் தொடங்குகிறது எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

22. அத்யயன உற்சவம்

மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை, பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். மார்கழிமாதத்தில் வளர்பிறை பிரதமை தொடங்கி, 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்திரம் ஸ்ரீ பிரஸன்ன ஸம்ஹிதையில் விதிக்கப்பட்டுள்ளது.பிரதமை முதல் தசமி முடிய பத்து நாள் வேதங்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடி உற்சவம் செய்ய வேண்டும். அந்த பத்துநாள் உற்சவத்திற்கு “அத்யயனஉற்சவம்” என்று பெயர். அத்யயனம் என்றால் வேதங்களை பாராயணம் செய்தல் என்று பொருள்.

23. மோட்ச உற்சவம்

அடுத்து வளர்பிறை ஏகாதசி(வைகுண்ட ஏகாதசி ) முதல் பஞ்சமி முடிய 10 நாள்கள் நடத்த வேண்டிய உற்சவத்திற்கு “மோட்ச உற்சவம்” என்று பெயர். அத்யயன உற்சவம் பகலில் செய்ய வேண்டிய உற்சவம் .மோட்ச உற்சவம் இரவில் செய்யவேண்டிய உற்சவம். இந்த உற்சவங்களில் பகவானை மண் டபத்தில் எழுந்தருளப் பண்ணி உற்சவங்களை நடத்த வேண்டும். ஏகாத சியன்று பகவத் சன்னதிகளில் , வேதங்களை ஆரம்பித்து, பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி, பத்தாவது நாளில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆகமங்களில் சொல்லப்பட்ட விதி. திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் இந்த விதிப்படியே நடந்தது.

24. பெருமாள் தமிழ் கேட்க வேண்டும்

திருமங்கை ஆழ்வார் காலத்தில் வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. திருமங்கை யாழ்வார்தான் இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றி யவர். திருமங்கையாழ்வார், தம்முடைய தலைவராகிய நம்மாழ்வாரின் பாசுரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களையும், நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டால், அதற்கு ஆறு அங்கங்களை ஆறு பிரபந்தங்களாக அருளியவர் திருமங்கை ஆழ்வார். வேதங்களைப் போலவே தன்னுடைய திருச்செவிகளால் எம் பெருமான், தமிழ் வேதமான நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கேட்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டார். இதற்கான ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

25. திருநெடுந்தாண்டகம்

தன்னுடைய ஜன்ம நட்சத்திரமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத் திரத்தில், திருவரங்கன் முன்னால், தன்னுடைய ஆறாவது பிரபந்தமான திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் இசைத்தார், திருமங்கையாழ்வார். பெருமாளும் ஆழ்வாரின் தமிழை இயலும் இசையும் அபிநயமுமாகக் கேட்டு மிகவும் உள்ளமுகந்தார். சாமவேதம் கேட்டுப் பழகிய திருச்செவிகளுக்கு, உள்ளம் உருக்கும் தமிழ் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. திருமங்கையாழ்வாருக்குப் பரிசு தர எண்ணினார்.

26. தமிழுக்கு வேத சாம்யம்

“என்ன வரம்?” என்று பெருமாள் கேட்க, ஆழ்வாரின்(நம்மாழ்வார்) தமிழுக்கு “வேத ஸாம்யம் தரவேண்டும்” என்று கேட்க, “அது என்ன?” என்று பெருமாளும் திரும்பக் கேட்க,” தேவரீர் வைகுண்டத்தில் எப்பொழுதும் சாமகானம் கேட்டுக் கொண்டிருப்பீர். பூலோக வைகுந்தமான திருவரங் கத்தில் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று உற்சவத்தின் போது வடமொழி வேதத்தோடு தமிழ் வேதமாகிய திருவாய்மொழியையும் சமமாகக் கேட்டருள வேண்டும்.

திருவாய்மொழித் திருநாளாக இந்த விழா நடக்க வேண்டும்”என்று கேட்க, பகவானும் அப்படியே தந்தருளினார்.. எனவே இந்தத் திருவிழாவுக்கு ஆதாரம் திருமங்கை ஆழ்வார் பாடிய திரு நெடும் தாண்டகம். இதனை சாத்திர நூல் என்று சொல்வார்கள். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் தொடக்கமாக எல்லா ஆலயங்களிலும் திருநெடுந்தாண்டகம் தான் முதல் நிகழ்வாக இருக்கும். இந்த ஆண்டு திருவரங்கம் தொடக்கமாக எல்லா ஆலயங்களிலும் 19.12.2025 திருநெடும்தாண்டகம் தொடங்குகிறது.

27. பகல் பத்து

அடுத்த நாள் 20.12.2025 முதல் பகல் பத்து தொடக்கம். இதில் திருவாய் மொழி தவிர மற்ற ஆழ்வார்கள் பிரபந்தங்களைப் பாடுவார்கள். இந்த ஏற்பாடு திருமங்கையாழ்வார் காலத்துக்குப் பின் நாதமுனிகள் செய்த ஏற்பாடு பகல் பத்து. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஆழ்வார்கள் திருவோலக்கத்தில் இந்தப் பாசுரங்களைப் கேட்பதால், அத்யயன காலத்தில் (மார்கழி) வைணவர்கள் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி தவிர மற்ற ஆழ்வார்கள் பிரபந்தங்களை தங்கள் இல்லங்களில் ஓதுவது இல்லை.

28. மோஹினி அலங்காரம்

பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு மோஹினி அவதார அலங்காரத்தைச் செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக் கொண்டு கருட மண்டபம் வந்து காட்சி தருவார். இந்த ஆண்டு இந்த நிகழ்வு 29.12.2025 நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை (30.12.2025) அதிகாலை 4:30 மணி அளவில் கோயிலுக்கு வடக்கே உள்ள சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் புறப்பாடு நடக்கும் பெருமாளோடு அடியவர்களும் பரமபத வாசலைக் கடப்பார்கள். சில கோயில்களில் சொர்க்கவாசல் இருக்காது. பெருமாளை நேரடியாகச் சேவிப்பது சொர்க்கத்தில் சேவிப்பது போலத்தான்.

29. நம்மாழ்வார் மோட்சம்

வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர் ரங்கநாதப் பெருமாள் முத்தங்கி சேவையிலும் (முத்துக்கள் பதித்த பட்டாடை) உற்சவரான நம்பெருமாள் ரத்னாங்கி சேவையிலும் காட்சி தருவார்கள். வைகுண்ட ஏகாதசி நாள் இரவு முதல் இராப் பத்து தொடங்கும். இந்த நாள்களில் ஸ்ரீரங்கம் பரமபத வாசல் மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை நடைபெறும்.

அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, நம்மாழ்வாருக்குச் சேவை சாதிப்பார். இதை திருக் கைத்தல சேவை என்பார்கள். அன்று ஆழ்வார் நாயகி பாவத்தில் ‘‘கங்குலும் பகலும்…’’ பாசுரம் சேவிப்பதால் ஆழ்வாருக்கு மோஹினி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஜனவரி 6-ஆம் தேதி திருமங்கையாழ்வாரின் வேடுபரி உற்சவம் நடைபெறும். எம்பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வருவார் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி தீர்த்தவாரியும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும். இந்த நாள்களில் திருவரங்கத்தில் பரமபதவாசல் திறந்திருக்கும்.

30. ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசி அன்று நியமத்தோடு உபவாசம் இருக்க வேண்டும். குறிப்பாக அன்று அன்னத்தை சாப்பிடக் கூடாது. ஏகாதசி இரவு முழுவதும் விழித்திருந்து திருமாலுக்குரிய மந்திரங்களையும், தோத்திரங்களையும் பாட வேண்டும். ஆழ்வார்களின் பாசுரங்களை பாராயணம் செய்யலாம். நாம சங்கீர்த்தனம் செய்யலாம். இரவு ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களைக் கேட்பதோ அல்லது வாசிப்பதோ சாலச் சிறந்தது. ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, (31.122025) காலை ஆராதனைகள் முடித்து, ஆறு நாழிகைக்குள் பாரணை முடிக்க வேண்டும்.

துவாதசி அன்று சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றிய குறிப்பு உண்டு. அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாகச் சொல்வார்கள் . பகவானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, ஏழை ஒருவருக்கு உணவளித்து விட்டு, தன்னால் இயன்ற தானங்களைச் செய்து, பின்னர் பிரசாதம் உட் கொள்ள வேண்டும். துவாதசியில் கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ,துவரம் பருப்பு, கடுகு, மிளகாய், கடலை, கொத்தமல்லி, புளி, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் முதலிய பதார்த்தங்களைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

எஸ். கோகுலாச்சாரி

Tags : Anuman ,Vaikunda Ekadasi ,Anuman Jayanti ,Marghazi ,
× RELATED பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்று அழைக்கிறோம்?