வல்லம், டிச. 18: தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்கான கரும்பு அரவை பணியானது நேற்று தொடங்கியது. தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கரும்புகளை பயிரிட்டு சர்க்கரை ஆலைக்கு வழங்கி வருகின்றனர்.
அதன்படி நடப்பாண்டு 1,800 விவசாயிகள் 5,500 ஏக்கரில் ஆலைக்கரும்பு பயிரிட்டுள்ள நிலையில், தற்போது கரும்பு வெட்டும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. வெட்டிய கரும்புகளை அரவை செய்வதற்கான பூர்வாங்க பணிகள் நேற்று தொடங்கியது. கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆலையின் தலைமை நிர்வாகி ராமன், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வித்யா, உதவி இயக்குநர் இந்திரஜித், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் அருளானந்தசாமி, கரும்பு பயிரிடும் விவசாயிகள் கோவிந்தராஜ், ராமசாமி, அறிவழகன், திருப்பதி வாண்டையார், துரை.பாஸ்கர், மதியழகன், அகிலன், மணி மற்றும் ஆலையில் அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கடந்தாண்டு 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 1.25 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. நடப்பாண்டு கூடுதலாக 5,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது கரும்பு வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. வெட்டிய கரும்புகள் அரவை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் 1.60 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
