தஞ்சாவூர், டிச. 19: தஞ்சாவூர் மாநகராட்சி 51வது வார்டு எலிசா நகரில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. நூலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தி.மு.க மருத்துவ அணி மாநில துணைச் செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான அஞ்சுகம்பூபதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தஞ்சை திமுக மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ, மேயர் சண் ராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நூலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினர். இதில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், கவுன்சிலர்கள் நீலகண்டன், கலையரசன், உஷா, ஆனந்த் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், எலிசா நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
