இலுப்பூர், டிச.19: பொங்கல் பண்டிகையையொட்டி அன்னவாசல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சாலை ஓரங்களில் கரும்புகளை விற்பனை செய்ய துவங்கி உள்ள விவசாயிகள். அன்னவாசல் ஒன்றிய பகுதிகளான சென்னப்பநாயக்கன்பட்டி, பெருஞ்சுனைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. கரும்பு சாகுபடி காலம் என்பது நடவு செய்யும் பகுதியை பொறுத்து மாறுபடும். தமிழ்நாட்டில் பொதுவாக சித்திரை மாதத்தில் நடவு செய்து தை மாதம் பொங்களுக்கு அறுவடைக்கு வரும்.
இதற்காக அன்னவாசல் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் எட்டு மாதங்களுக்கு முன்பு வயல்களை உழுது செம்மைப்படுத்திய விவசாயிகள் பார்களை அமைத்து கரும்பு சாகுபடி செய்யும் பணியை துவங்கினர். கரும்பு வளர்ந்து வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உரம் இடுவதற்கு வசதியாகவும் தண்டு துளைப்பான் நோயிலிருந்து பாதுகாக்கவும் கரும்பு சீராக வளர காற்றோட்டம் தேவைக்காகவும் கரும்பு சாயாமல் இருக்க தூர்களில் மண்ணை அணைக்கவும் தோகை உரிக்கும் பணியை மேற்கொண்டனர். தற்பொழுது கரும்பு விளைந்த நிலையில்அறுவடைக்கு தயாராக உள்ளது. இதுகுறித்து சாலை ஓரத்தில் விற்பனையை துவங்கி உள்ள கரும்பு விவசாயிகள் கூறுகையில் கடந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை ரூ.20-முதல் ரூ.30 வரையிலும் பத்து கரும்பு கொண்ட கட்டு ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது.
இந்த வருடமும் இதே விலையில் தான் விற்பனையை தொடங்கியுள்ளோம். கரும்பு ஓராண்டு கால பயிர் ஆகையால் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகம் உள்ளது. இதனால் கரும்புக்கு உரிய விலை கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கடந்த ஆண்டை விட கூடுதல் விலைக்கு விற்றால்தான் ஈடுகட்ட முடியும் என்றும். கரும்பு விவசாயிகள் பொங்கலுக்கு முன்வாரத்தில்தான் மொத்த விற்பனைக்காக அறுவடை செய்வோம் என்றார்.
