சென்னை: சென்னையில் காற்று மாசு மிகவும் மோசமடைந்து வருவதால் ஒரு நாளைக்கு 4 சிகரெட்டை புகைக்கும்போது ஏற்படும் பாதிப்பை மக்கள் அனுபவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் காற்று மாசு என்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இந்த காற்று மாசு உச்சம் தொட்டு அங்குள்ள மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
டெல்லியில் காற்று மாசுவை தடுக்க போதுமான நடவடிக்கைகளை மோடி தலைமையிலான ஒன்றிய அரசும், அந்த மாநில முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜ அரசு எடுக்கவில்லை. இதனால், அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சுத்தமான நகரமாக இருந்து வந்த சென்னையில் இப்போது காற்று மாசு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் புகை மூட்டம் நகரம் முழுவதும் படர்ந்து, மூச்சு விட கடினமான நிலை உள்ளது. சென்னையின் காற்று தர குறியீடு 160-ஐ தாண்டி உள்ளது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். கடலோர காற்றால் சுத்தமான காற்றை சுவாசித்த சென்னைக்கு இது ஒரு பெரிய மாற்றம்.
கடந்த ஆறு ஆண்டுகளை விட இந்த மாதத்தில்தான் சென்னையில் காற்று மாசு மிக மோசமாக உள்ளது. தற்போது காற்று தரக்குறியீடு சராசரியாக 158 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் காற்றின் தரக்குறியீடு 53 ஆக இருந்தது. இது மிக குறைந்த மாசு நிலை. தற்போதைய அதிகரிப்புக்கு முக்கிய காரணம் பி.எம் 2.5 என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய தூசு துகள்கள்தான். இவை நுரையீரலில் ஆழமாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சென்னையில் பொதுவாக டிசம்பர்- ஜனவரி மாதங்களில் காற்று மாசு அதிகரித்து 100-ஐ தாண்டும். ஆனால், இந்த மாதத்தில் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. நகரம் முழுவதும் இந்த நிலை இருந்தாலும் சில பகுதிகளில் மிக அதிகமாக காற்று மாசு உள்ளது. பெருங்குடியில் காற்று தரக்குறியீடு கிட்டத்தட்ட 200யை தொட்டுவிட்டது. மேலும், கொடுங்கையூரில், சீனிவாசநகர் காலனி, காந்தி நகர், மணலி, அரும்பாக்கம் மற்றும் அமெரிக்க தூதரக பகுதி போன்ற இடங்களில் 170யை காற்று தரக்குறியீடு நெருங்கி உள்ளது. நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதால், சென்னையில் வசிக்கும் மக்கள் சுவாசிக்கும் காற்று என்பது ஒரு நாளைக்கு சுமார் 3.3 சிகரெட் புகைப்பதற்கு சமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, அந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு
காற்று மாசுவால் சுவாசம் தொடர்பான நோய்கள், இதய நோய்கள், கண் மற்றும் தோல் பிரச்னைகளை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் வானிலை காரணமாக மாசு தரையோடு சேர்ந்து இருப்பதால் ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது. பி.எம் 2.5 என்ற நுண்ணிய வகை தூசு பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இது ரத்தத்தில் கலந்தால் கரு கலையும் நிலையும் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
