புதுடெல்லி: பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்த புதிய மசோதாவை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். பங்குச்சந்தையை கட்டுப்படுத்த பங்குச்சந்தை சட்டம் – 1992, டெபாசிட் சட்டம் – 1996 மற்றும் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் -1956 ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே சட்டமாக மாற்றும் நோக்கில், பங்குச்சந்தை ஒழுங்குபடுத்துதல் சட்ட மசோதா – 2025ஐ மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
இது அதிகார பரவல் கொள்கைக்கு எதிரானதாகவும், தனி அமைப்புக்கு அதிக அதிகாரங்களை குவிப்பதாகவும் உள்ளதாக, திமுக எம்பி அருண் நேரு, காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ‘‘அரசு இந்த மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்புகிறது. இதுபோன்ற விவரங்களை அந்த குழுவில் விவாதிக்கலாம்’’ என்றார்.
அமர்விற்குத் தலைமை தாங்கிய கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி, ‘‘மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. அவர் இது குறித்து முடிவெடுப்பார்’’ என்று கூறினார்.
