தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளம் கட்டுக்குள் வந்துள்ளது. மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேலும் சில தினங்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 12ம் தேதி மதியம் முதல் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து 13, 14ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி பகுதியில் தரைத்தளம், பாலங்களில் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி கம்பிகள், காவலர் கூண்டு, ஒலிபெருக்கி உள்ளிட்டவை சேதமடைந்தன. தற்போது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரைத்தளம் சீரமைக்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுகிறது.
தற்போதைய நிலையில் 6வது நாளாக தொடர்ந்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவி, புலிஅருவி ஆகியவற்றில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேலும் சில தினங்கள் தடை நீடிக்க வாய்ப்பு உள்ளது. மெயின் அருவி தடை காரணமாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். ஒரு சிலர் ஐந்தருவிக்கு சென்று குளித்தனர்.
