நட்சத்திர ஓட்டல்கள், நிறுவனங்கள் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுகின்றன: சென்னை மாநகராட்சியில் குவியும் புகார்கள்

 

சென்னை: சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேட்டட் கம்யூனிட்டிகள் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுகின்றன என சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. நட்சத்திர ஓட்டல்கள், கேட்டட் கம்யூனிட்டிகள் மற்றும் மால்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் சட்டவிரோதமாக சென்னை மாநகராட்சியின் குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை கொட்டுகின்றன. உண்மையில் இவர்கள் தங்களுக்கென தனியாக கழிவு அகற்றும் நிறுவனங்களை நியமிக்க வேண்டும். இவை ஒரு நாளைக்கு 100 டன்னுக்கு மேல் கழிவுகளை உருவாக்குவதால், அதிக கழிவு உற்பத்தி செய்பவர்கள் என்ற பிரிவில் வருகின்றன. இவர்களுக்கு பெரிய அளவில் கழிவுகளை அகற்ற 15-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ஆற்காடு சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.என். செட்டி சாலை மற்றும் வெங்கடநாராயண சாலை போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் பல டன் பச்சை மற்றும் கருப்பு பைகளால் தினமும் நிரம்பி வழிவதை காணலாம்.

காலையிலேயே தொட்டிகள் நிரம்பி வழிவதால், அடுத்த நாள் 25% அதிக தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.மேலும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குப்பை லாரிகளை தொட்டிகளுக்கு அருகில் நிறுத்துவதில் சிரமம் உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியில் புகார்கள் குவிந்து வருகின்றன.
மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களும் சர்தார் படேல் சாலை, எல்.பி. சாலை, அண்ணா மெயின் சாலை மற்றும் பெசன்ட் நகர் அவென்யூக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பெரிய அளவு கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட அதிக கழிவு உற்பத்தி செய்பவர்கள் இருந்தாலும், அவர்களில் சுமார் 540 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்துள்ளனர்.

இந்த நிறுவனங்கள் கூட சில சமயங்களில் மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டுகின்றன. இது குறித்து சென்னைமாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை தலைமை பொறியாளர் பாலமுரளி கூறுகையில், ”கண்காணிப்பு வசதி இல்லாததால் மீறுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தீர்வு என்னவென்றால், இனிமேல் மாநகராட்சியே நேரடியாக கழிவுகளை சேகரிக்கும். ஏற்கனவே உள்ள தனியார் ஒப்பந்தங்களில் பெரிய அளவு கழிவு சேகரிப்பை ஒரு பகுதியாக சேர்க்க திட்டமிட்டுள்ளோம். வீடு வீடாக அல்லது தொட்டிகளிலிருந்து நேரடியாக ஒப்பந்தக்காரர்கள் சேகரிப்பார்கள்” என்றார்.

 

Related Stories: