×

பேனர்கள் வைக்க 17 நிபந்தனைகள்; ஈரோட்டில் விஜய் நாளை வாகன பிரசாரம் தவெக நிர்வாகிகள் மோதலால் பரபரப்பு

 

ஈரோடு: ஈரோடு அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் வாகன பிரசார பொதுக்கூட்டம் நாளை நடப்பதையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சி 17 நிபந்தனைகள் விதித்துள்ளது. புஸ்சி ஆனந்துக்கு மாலை அணிவிப்பதில் தவெக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் வாகன பிரசார பொதுக்கூட்டம் நாளை (18ம் தேதி) நடக்கிறது. கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போலீசாரால் நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தவெக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த பணியில் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுக்கூட்டத்தில் கட்சியினர் சுமார் 10 ஆயிரம் பேரும், பொதுமக்கள் சுமார் 25 ஆயிரம் பேரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 15 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. விஜய் பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார். வாகனம் நிறுத்தப்படும் பகுதியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளது. தடுப்பு வேலி பகுதியில் சுமார் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்த 80 ஏக்கர் பரப்பளவில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிக்காக பெருந்துறை, ஈரோடு, சென்னிமலை நிலையங்களில் இருந்து மொத்தம் 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்பி சுஜாதா தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விஜய் வாகன பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கோரி, தவெக மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயினிடம் நேற்று மனு அளித்தனர். இதையடுத்து ஈரோடு மாநகர பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தவெக நிர்வாகிகளுக்கு 17 நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. அதில் ‘‘சாலையின் மைய திட்டு பகுதியில் விளம்பர பேனர் வைக்க அனுமதியில்லை. ஒரே சாலையில் ஒரே மாதிரியான அளவு விளம்பர பேனர் வைக்கப்பட வேண்டும். சாலையின் இருபுறங்களிலும் 3 மீட்டர் அகலத்துக்கு குறைவான நடைபாதை இருந்தால் பேனர் வைக்க அனுமதியில்லை. நடைபாதையில் விளம்பர பேனர்களை குறுக்காக வைக்கக்கூடாது. உள்நோயாளிகள் உள்ள மருத்துவமனைகள், பள்ளி வளாகம், வழிபாட்டு தலங்கள் முன் பேனர் வைக்க அனுமதியில்லை. அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது.

சாலையின் அளவுக்கு ஏற்ப பேனர்களை வைக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட 17 நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விஜய் பிரசார பொதுக்கூட்ட முன்னேற்பாடு பணிகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்றிரவு ஆய்வு செய்தார். அப்போது, அவருக்கு மாலை போடுவதில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் இடையே போட்டி ஏற்பட்டது. இரு மாவட்ட நிர்வாகிகளும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திடீரென மோதலாகி, கைகலப்பாகும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் புஸ்சி ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே, இருதரப்பினரும் அமைதியாகினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தவெகவினருக்கு எப்போதுதான் அரசியல் புரிதல் வருமோ? என தெரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : Vijay ,Erode ,Vijayamangalam ,Pussy ,Anand ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...