சிறந்த சர்வதேச படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய திரைப்படம் ஹோம் பவுண்ட் தேர்வு..!

இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட் ’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டியில் ‘ஹோம்பவுண்ட் ’ உள்பட 15 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 98வது ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு ஹோம்பவுண்ட் தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டார், ஜான்வி கபூர், விஷால் ஜெத்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக, உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்த படம் இந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் திரையிடப்பட்டது. திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 7 நிமிடங்கள் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச மக்கள் விருதுக்கான 2-வது இடத்தைப் பிடித்தது. கொரோனா காலத்தில் இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சந்தித்த பிரச்சனைகள் குறித்து நியூயார்க் டைம்ஸில் வெளியான கட்டுரை அடிப்படையில் உருவான ஹோம்பவுண்ட் திரையரங்கு, ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் வட இந்தியாவில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் சந்தன் குமார், முகமது சோஹைஃப் என்ற இரு இளைஞர்கள் சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் மத ரீதியிலான சிக்கல்களுக்கு மத்தியில், இருவரும் காவல் துறையில் வேலைக்கு சேர்வதற்கு அடுத்தகட்டத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். மேலும், அடக்குமுறைக்கு எதிராக எவ்வாறு போராடுகிறார்கள் என்பதையும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹிந்தி படமான ‘ஹோம் பவுண்ட்’ சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது போட்டிக்கு ஹோம்பவுண்ட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளித்திருப்பதாக தயாரிப்பாளர் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: