ஊட்டி, டிச.17: கட்டப்பெட்டு முதல் இடுஹட்டி வரை ரூ.2.34 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலையினை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள எப்பநாடு ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி மதிப்பில் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. இச்சாலை, கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நேற்று தும்மனனட்டி பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா ராமசசந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து சாலையை திறந்து வைத்தார். மேலும் தும்மனட்டி, கக்குச்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பொது நூலகங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகங்கள் கட்டப்பபட்டுள்ளன. இதனையும் அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து சாலை மற்றும் நூலக கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட கட்டப்பெட்டு முதல் இடுஹட்டி வரை பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏறத்தாழ சுமார் ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 3 கி.மீ சாலையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல், தும்மனட்டி ஊராட்சி கெந்தொரை, கக்குச்சி ஊராட்சி கக்குச்சி பகுதிகளில் பொது நூலகங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய நூலகங்களும் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.2.78 கோடி மதிப்பில் நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையானது நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ரமேஷ், ஊட்டி நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், அனிதா, உதவி செயற்பொறியாளர் (சாலை பணிகள்) சங்கர், உதவி பொறியாளர் செல்வதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
