நீலகிரியில் காலநிலையில் திடீர் மாற்றம் மேகமூட்டம், சாரல் மழை, குளிரால் விவசாயிகள் கவலை

ஊட்டி, டிச.17: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பனி விழ துவங்கும். இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி மழை நவம்பர் மாதம் வரை பெய்தது. மேலும், நவம்பர் மாதம் முழுவதும் மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பனி விழுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் மழை பெய்யாத ஒரு சில நாட்கள் நீர் பனி மட்டுமே விழுந்தது.

உறைப்பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உறைப்பனி விழ துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று முன்தினம் மைனஸ் ஒரு டிகிரிக்கு ஊட்டி வெப்பநிலை செல்லும் அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, தலைக்குந்தா, கிளன்மார்க்கன், சூட்டிங் மட்டம், பைக்காரா, சாண்டி நல்லா, அப்பர் பவானி, அவலாஞ்சி, கோரப் போண்டா போன்ற பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தால் போல் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால், அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும் தாழ்வான பகுதிகள் மற்றும் நிழல் தரும் பகுதிகளுக்கு சென்றால் குளிர் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பைக்காரா, சூட்டிங் மட்டம், தலை குந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. பனி காரணமாக அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்பவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அவதிக்குள்ளாகினர்.

பெரும்பாலான தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் தீ மூட்டி காய்ந்தனர். மேலும், அதிகாலை நேரங்களில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் குளிரால் சற்று தாமதமாக சென்றனர். இந்நிலையில், உறைப் பனியின் தாக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பெரும்பாலான பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது விழுந்தது. இதனால், அதே சமயம் குளிரும் குறையவில்லை. நேற்று காலை ஊட்டியில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 3 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.

இதனால், அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சுறு்றுலா பயணிகள் அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். மேலும், அனைத்து சாலைகளிலும் கடும் மேக மூட்டம் நிலவிய நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர். அனைத்து வாகனங்களும் பகல் நேரங்களிலேயே மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே பயணித்தனர். மேலும், மேக மூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில், வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் ஊர்ந்தபடியே சென்றன.

கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் பனி பொழிவு காணப்பட்டு வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் நகர் பகுதியில் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி இருந்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் நகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. மேலும் கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். தொடர்ந்து குளிர் காலநிலை நிலவி வந்ததால் சாலையோர வியாபாரிகள், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்புவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் குளிரில் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related Stories: