மக்களவையில் நிறைவேற்றம் காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு மசோதா: எல்ஐசி முகவர்களை பாதிக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று காப்பீட்டு சட்டங்கள் திருத்தம் சட்டம் 2025 மசோதா(‘சப்கா பீமா சப்கி ரக்ஷா) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகம் செய்து பேசினார். கடந்த காலத்தில் உள்ள காப்பீட்டுச் சட்டம 1938, ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் 1956, மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999 ஆகியவற்றை திருத்தி இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திருத்த மசோதாவில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தும்.

இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த மசோதா முன்மொழிந்தாலும், உயர் அதிகாரிகளில் ஒருவரான தலைவர், நிர்வாக இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி ஒரு இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இது காப்பீட்டு அல்லாத நிறுவனத்தை காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்பதற்கும் வழிவகுக்கிறது.காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை நேரடியாக அனுமதிக்கும் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்எஸ்பி கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தார். அவர் பேசும் போது,’ 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டின் மூலம், இது மறைமுகமாக எல்ஐசி-யை முழுவதுமாகத் தனியார்மயமாக்குவதற்குச் சமம். இது எல்ஐசி-யையும், நாட்டில் உள்ள எல்ஐசி முகவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். தேசத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களையும், குறிப்பாக எல்ஐசி மற்றும் பிற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும்’ என்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா நிைறவேற்றப்பட்டது.

* கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது உயர்கல்வி ஆணைய மசோதா
உயர்கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பை அமைப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்குப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை மக்களவை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்மொழிந்தார், மேலும் அது அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. கூட்டுக் குழுவில் மக்களவையை சேர்ந்த 21 எம்பிக்களும், மாநிலங்களவையை சேர்ந்த 10 எம்பிக்களும் இடம்பெறுவார்கள். இந்தக் குழு, 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

Related Stories: