கொழும்பு: யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்தியாவிற்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டலின் பின்னணியில் இலங்கை அமைச்சர் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையில் ஆளும் ஜேவிபி கூட்டணியின் முக்கிய தலைவரும், தற்போதைய போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தித் துறை அமைச்சருமான பிமல் ரத்னநாயக்க, தொடர்ந்து இலங்கை – இந்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தியா தொடர்பான திட்டங்களை தடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அதிபர் அனுகுமார திசநாயக்க, பிமல் ரத்னநாயக்க வசமிருந்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை பறித்திருந்தார். இந்தியாவிற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க பின்னணியில் இருந்து செயல்படுவதாக தூதரக வட்டாரங்கள் தற்போது சந்தேகம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கடந்த 12ம் தேதி தமிழக படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து உள்ளூர் மீனவர்கள் நடத்திய போராட்டம் அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட்டுள்ளது. ஜேவிபி கட்சியின் உள்ளூர் தலைவரான ஜெயந்திரன் பிரதீபன் என்கிற விஜய் என்பவர் இந்தப் போராட்டத்தை கையிலெடுத்து, ‘மீனவர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை ஆயிரக்கணக்கான மீனவர்களுடன் சென்று முற்றுகையிட்டு மூடுவோம்’ என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும் சீன மற்றும் அமெரிக்க தூதரகங்களை அங்கு திறக்க வேண்டும் என்றும் அவர் கோஷமிட்டார். அமைச்சரின் தூண்டுதலின் பெயரிலேயே இவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உள்ளூர் மீனவர் சங்கங்கள், ‘எங்கள் போராட்டம் வாழ்வாதாரம் சார்ந்தது மட்டுமே தவிர, இந்தியாவிற்கு எதிரானது அல்ல’ என விளக்கம் அளித்துள்ளன.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், ‘நியாயமான மீனவர் பிரச்னையை அரசியல் லாபத்திற்காக ஜேவிபி இந்தியாவிற்கு எதிராக மாற்ற முயற்சிக்கிறது’ என குற்றம் சாட்டியுள்ளார்.
