இயந்திர நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்

*வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் பொதுவாக நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.

இதில் சொர்ணவாரி பட்டத்தில் சுமார் 2000 ஹெக்டேரிலும், சம்பா பட்டத்தில் சுமார் 1,500 ஹெக்டேரிலும், நவரை பட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு நவரை பட்டத்தில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் வருவாய் கிராமத்தில் இயந்திர நடவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இயந்திர நடவு முறையில் நாற்று நடுவதால் விவசாயிக்கு நேரம் சேமிப்பு மற்றும் ஆள்பற்றாக்குறையால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு ஒரு இயந்திரம் மூலம் குறைந்தது 8 ஏக்கரில் இருந்து 10 ஏக்கர்வரை நடமுடிகிறது.

இயந்திர நடவால் போதுமான இடைவெளி ஏற்பட்டு, பயிர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதியும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மிக குறைவாகவே இருக்கும்.அதன்படி, சுமார் 50 ஏக்கரில் நிலப்பரப்பில் இயந்திரம் மூலம் நாற்று நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி வேளாண்மை அலுவலர் ஐயப்பன் மற்றும் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உடனிருந்தனர்.

Related Stories: