வாரணாசி: காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் வாரணாசி கோட்ட ஆணையர் எஸ் ராஜலிங்கம் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டில் மட்டும் 11 கோடி சுற்றுலாப் பயணிகள் வாரணாசிக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 14 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ஆசியாவிலேயே முதலாவது ரோப் கார் பொது போக்குவரத்து சேவைக்கான பணிகள் வாரணாசியில் ரூ. 800 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாரணாசி நகரத்தின் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் மக்களின் விரைவான போக்குவரத்துக்கான நோக்கில், இந்தக் கனவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கட்டமைப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து கதோலியா வரை 3.85 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு நிலையங்களை உள்ளடக்கி இத்திட்டம் செயல்படும்.
இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்லும் பயண நேரம் 16 நிமிடங்கள் என்ற அளவுக்கு குறையும். இதன்மூலம் அன்றாடம் பணிக்கு செல்பவர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அனைவரும் பயனடைவர். நாட்டிலேயே முதல்முறையாக பொது போக்குவரத்துக்கு ரோப் கார் சேவையை பெறும் முதல் நகரமாக வாரணாசி மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
