ரூ.237 கோடியுடன் அணிகள் தயார்; துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம்

துபாய்: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம், துபாயில் இன்று நடைபெற உள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட சில அணிகளில் அடித்து ஆடக்கூடிய வீரர்கள் இல்லாததால் மோசமான தோல்விகளை சந்திக்க நேரிட்டது. அதனால், புள்ளிப் பட்டியலில் இவை பின்னுக்கு தள்ளப்பட்டன.

இந்நிலையில், துபாயில் இன்று வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இதில், 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் 77 வீரர்களை, ஐபிஎல்லில் போட்டியிடும் அணிகள் தேர்வு செய்ய உள்ளன. தற்போதைய சூழ்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனுக்கு பல அணிகள் மோதும் எனத் தெரிகிறது. குறிப்பாக, சிஎஸ்கே, கேகேஆர் ஆகிய அணிகள், கேமரூனுக்கான போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்கும் அணிகள், ஒட்டுமொத்தமாக, ரூ.237.55 கோடி செலவிட உள்ளன.

அதில், மும்பை அணியால் அதிகபட்சம் ரூ. 2.75 கோடி மட்டுமே செலவிட முடியும் என்பதால், ஏலத்தில் அதன் பங்கு அதிகமாக இருக்க இயலாது. மாறாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம், ரூ.64.30 கோடி மீதம் உள்ளதால், சிறந்த வீரர்களை கொழுத்த விலைக்கு வாங்கும் ஆற்றல் படைத்ததாக உள்ளது. அடுத்ததாக, சிஎஸ்கே அணியிடம் ரூ. 43.40 கோடி உள்ளதால், சிறந்த வீரர்களுக்கு அதிக விலை தந்து வலை வீசும். அவை, பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அதிரடி காட்டக்கூடிய ஆல் ரவுண்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் என்பதால், கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர், ஜேஸன் ஹோல்டர் ஆகிய வீரர்களுக்கு கிராக்கி அதிகமாக இருக்கும். இந்த மூவரின் குறைந்தபட்ச ஏலத் தொகை, தலா ரூ. 2 கோடி.

கேகேஆர் அணியில் இருந்த ஆந்ரே ரஸ்ஸல் விடுவிக்கப்பட்டு, அந்த அணியின் புதிய பவர் கோச் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த அணிக்கு, குறைந்தபட்சம் 2 டாப் ஆர்டர் ஆல்ரவுண்டர்கள் தேவைப்படுகின்றனர். கடந்த முறை, கேகேஆர் அணியில் ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு, கடந்த ஐபிஎல் தொடர் மிக மோசமானதாக அமைந்திருந்தது. அதனால், அவருக்காக ஏலத் தொகையில் சரிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கேமரூன் கிரீனுக்கு, குறைந்த பட்சம் ரூ. 18 கோடி முதல் அதிகபட்சமாக, ரூ. 25 கோடி வரை ஏலம் கேட்கப்படலாம்.

இவர்களை தவிர, இங்கிலாந்து பந்து வீச்சாளர் லியாம் லிவிங்ஸ்டோன் சிறப்பாக ஆடி வருவதால், இம்முறை, ரூ. 9 கோடி வரை ஏலம் கேட்கப்படலாம். பர்மிங்காமில் சமீபத்தில் நடந்த ஹன்ட்ரட்ஸ் கிரிக்கெட் போட்டியில், ரஷீத் கானின் பந்துகளை நார்நாராக கிழித்து, ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசிய பெருமை லிவிங்ஸ்டோனுக்கு உண்டு. தவிர, தென் ஆப்ரிக்கா வீரர் குவின்டன் டி காக் அவ்வப்போது அதிரடிகள் காட்டி தனது வல்லமையை நிரூபித்து வருவதால், அவர் மீதும் அணிகள் அதீத ஆர்வம் காட்டும். சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மதீஷா பதிரனா மீது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியிடம் ரூ. 22.95 கோடி ஏலம் கேட்பதற்கான தொகை உள்ளது. ஏலத்தில் பதிரனா மீது சிஎஸ்கே மீண்டும் ஆர்வம் காட்டுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்திய அணியில் ஆடாத, அன்கேப்டு வீரர்களில் அசோக் சர்மா, பிரசாந்த் வீர், முகுல் சவுத்ரி, ஆகியோரை ஏலத்தில் எடுக்கவும் அணிகள் ஆர்வம் காட்டும் என தெரிகிறது.

Related Stories: