×

அமித்ஷா முன்னிலையில் பாஜ தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றார்: டெல்லியில் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: பாஜ தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பாஜ கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக பீகார் பொதுப்பணித் துறை அமைச்சர் நிதின் நபின் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இவர், மறைந்த பாஜ மூத்த தலைவரும் பீகார் முன்னாள் எம்எல்ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகனாவார். ஆர்எஸ்எஸ் பின்னணியை கொண்டவரான நிதின், பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று, 2 முறை அமைச்சராக இருந்தவர்.

இந்நிலையில், புதிய தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்க நிதின் நபின் நேற்று மதியம் பாட்னாவில் இருந்து டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பல்வேறு பாஜ தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கட்சி தலைமையகத்திற்கு வந்த நிதின் நபினை ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் வரவேற்றனர். அமித்ஷா முன்னிலையில் பாஜவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜவில் தலைமுறை மாற்றத்தை குறிக்கும் வகையில், புதிய தேசிய செயல் தலைவராக தேர்வாகி உள்ள 45 வயதாகும் நிதின் நபின், ஜே.பி.நட்டாவுக்குப் பிறகு பாஜ தேசிய தலைவராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

தொண்டர்கள் கடுமையாக உழைக்க அழைப்பு
நிதின் நபின் நேற்று காலை பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,‘‘என் மீது நம்பிக்கை வைத்து கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமித்ததற்காக பாஜ தலைமைக்கு நன்றி. கட்சியின் ஆசீர்வாதத்தால் செயல் தலைவர் பதவி கிடைத்துள்ளது. பாஜ கட்சி இளைஞர்களை ஊக்குவித்து பெரிய இலக்குகளை அடைய அவர்களை வழிநடத்துகிறது. கட்சியை வலுப்படுத்துவதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.

காந்தி பெயர் நீக்கம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது, தேசத் தந்தைக்குப் பிரதமர் நரேந்திர மோடி செலுத்தும் அஞ்சலி எந்த அளவுக்கு வெற்றுத்தனமானது மற்றும் பாசாங்குத்தனமானது என்பதைக் காட்டுகிறது என்று கூறி 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்படும் மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கார்கே: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் பெயரை மாற்றுவது காந்திக்கு மோடி செலுத்தும் அஞ்சலி எந்த அளவுக்கு வெற்றுத்தனமானது, பாசாங்குத்தனமானது என்பதைக் காட்டுகிறது. ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான இந்த ஆணவமிக்க அரசாங்கத்தின் எந்தவொரு முடிவையும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும் வீதிகளிலும் கடுமையாக எதிர்க்கும். கோடிக்கணக்கான ஏழை மக்கள், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் உரிமைகளை இந்த அரசாங்கம் பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பிரியங்கா காந்தி: ஒரு திட்டத்தின் பெயர் மாற்றப்படும்போதெல்லாம், அலுவலகங்கள், எழுதுபொருட்கள் என பல மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காகப் பணம் செலவிடப்படுகிறது. அப்படியென்றால், இதன் பலன் என்ன? இது ஏன் செய்யப்படுகிறது? ஏன் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்படுகிறது? மகாத்மா காந்தி நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கே மிக உயர்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். எனவே, அவரது பெயரை நீக்குவதன் நோக்கம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. அவர்களின் நோக்கம் என்ன?.

சசிதரூர்: கிராம சுயராஜ்யம் மற்றும் ராமராஜ்யம் ஆகிய கருத்துக்கள் ஒருபோதும் போட்டி சக்திகளாக இருந்ததில்லை, மாறாக அவை காந்தியின் மனசாட்சியின் இரட்டைத் தூண்களாக இருந்தன. கிராமப்புற ஏழைகளுக்கான ஒரு திட்டத்தில் மகாத்மாவின் பெயரை மாற்றுவது இந்த ஆழமான ஒன்றிணைப்பை புறக்கணிக்கிறது. அவரது (காந்தியின்) இறுதி மூச்சு ‘ராம்’ என்பதற்குச் சான்றாக இருந்தது. இல்லாத ஒரு பிளவை உருவாக்கி, அவரது பாரம்பரியத்தை நாம் அவமதிக்க வேண்டாம்.

Tags : Nitin Nabin ,BJP ,Amit Shah ,Delhi ,New Delhi ,president ,Bihar ,Public Works Minister ,
× RELATED டெல்லி – ஆக்ரா சாலையில் தீப்பிடித்து எரியும் பேருந்துகள்