×

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம்; கோயில் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: ஐகோர்ட் கிளையில் தேவஸ்தான தரப்பு பரபரப்பு வாதம்

 

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஐகோர்ட் கிளையில் தேவஸ்தான தரப்பு வழக்கறிஞர் பரபரப்பாக வாதிட்டார். மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் முதல்படை வீடாக திகழ்கிறது. இந்த மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபமண்டபத்தில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இந்நிலையில், மதுரை மாவட்டம், ஏழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வேண்டும் என ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் குறிப்பிடும் பகுதியான மலை உச்சியில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் செயல் அலுவலர், மதுரை கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உரிமை கோர தனிநபருக்கு எவ்விதமான சட்ட உரிமையும் இல்லை. கார்த்திகை தீபத்தை எங்கு ஏற்றுவது என்பது குறித்தோ அல்லது இடத்தை மாற்றுவது தொடர்பாகவோ தேவஸ்தானம் மட்டுமே முடிவெடுக்க இயலும் என 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உறுதி செய்கிறது. எனவே, தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்Fடும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ‘இந்த விவகாரத்தில் விரும்புவோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம். அனைத்து மனுக்களும் டிச.12ல் விசாரிக்கப்படும்’ என்றனர்.

இதன்படி கடந்த 12ம் தேதி நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் மீண்டும் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இதேபோல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் தாக்கல் செய்த அப்பீல் மனு உள்ளிட்ட 26 மேல்முறையீட்டு மனுக்களும் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மதுரை கலெக்டர் தரப்பில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பழமையானது. தனி நீதிபதி பொதுநல வழக்கை போல உத்தரவிட்டுள்ளார். அந்த இடத்தில் தர்கா உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். கோயில் நிர்வாகம்தான் அனுமதி தரவேண்டும். மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் தீபத்தூண் உள்ளதா என்பதே அடிப்படை கேள்வி. உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்படும். இந்த இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே கல் தான். அது தீபத்தூண் அல்ல. தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஆகம விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு எதிராக செயல்பட முடியாது’ என்றார்.

கோயில் செயல் அலுவலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ‘மனுதாரர் தீபம் ஏற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கு 175 ஆண்டுகளாக எந்த ஆதாரம் இல்லை. மலை உச்சியில் உள்ள தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்காவும், மற்றொரு உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன. மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் பிரச்னை’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் இதுவரை 2 பேர் தரப்பு வாதங்கள் முடிந்துள்ளது. மீதமுள்ள மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் தங்கள் வாதங்களை வரும் 15ம் தேதி எடுத்து வைக்கலாம்’’ என்றனர்.
இதன்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தேவஸ்தானம் தரப்பில் வழக்கறிஞர் தர் ராமராகி ஆஜராகி, ‘தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கே முழு உரிமை, அதிகாரம் உள்ளது. தனிநபர் உரிமையை நிறைவேற்ற முடியாது. கோயில் நிர்வாகத்திற்கு சட்ட வழிமுறைகள், சட்ட விதிகள், அறநிலைய துறை விதிகள் உள்ளன. இந்த வழக்கில் நீதிமன்றம்தான் தாமாக முன்வந்து தர்காவை சேர்த்தது.

தனிநபர் வாதங்களை முன்வைத்த நிலையில், தர்கா தரப்பு வாதங்கள் முழுமையாக கேட்கப்படவில்லை. தீபம் ஏற்றுவது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என தனி நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது கோயில் கலாச்சாரத்தில் வரக்கூடிய நிகழ்வு. பல ஆண்டு காலமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார். அது அவருக்கான உரிமை இல்லை. கோயிலுக்கு என சட்ட திட்டங்கள் நடைமுறைகள் உள்ளன. மலைமீது விளக்கேற்றுவது வேறு; வீட்டில் விளக்கேற்றுவது வேறு. மனுதாரர் கார்த்திகை தீபத்தை வீட்டு தீபம் போல நினைக்கிறார். தனிநீதிபதி தனது தீர்ப்பில் தனிப்பட்ட கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகத்தில் உயர்நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வு பெற முடியும். ஏற்கனவே கோயில் உரிமை மற்றும் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் தொடர்பான வழக்கில் பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகமவிதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகமவிதிகளை மீறி புதிய பழக்கங்களை நடைமுறைகளை நிறைவேற்றும் போது பலதரப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், மனுதாரர் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த உத்தரவுகளை எல்லாம் தனிநீதிபதி கருத்தில் கொள்ளவே இல்லை.

இந்த வழக்கில் கோயில் தரப்பு, அரசு தரப்பு, அறநிலையத்துறை தரப்பு முன்வைத்த வாதங்களை தனிநீதிபதி ஏற்கவில்லை. இந்த விவகாரத்தை பொறுமையுடனும், கவனமாகவும், அறநிலையத்துறை மற்றும் தேவஸ்தானம் கையாள நினைக்கிறது’ என்றார். இதேபோல, அறநிலையத்துறை சார்பில் வக்கீல் ஜோதி வாதிடுகையில், ‘மலை உச்சியில் இருப்பது சமணர் காலத்து கல்தூண். இதில் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது போல மதுரையில் பல இடங்களில் மலைகளில் கல்தூண்கள் உள்ளன’ என்றார். இவ்வாறு பரபரப்பாக வாதம் நடைபெற்றது.

 

Tags : Thirupparangunram ,Aycourt ,Madurai ,Tiruparangunaram Hill ,Subramaniya ,Swami Temple ,Murukapperuman ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...