புதுடெல்லி: இந்தியாவில் பள்ளி மாணவர்கள் சராசரியாக 13 வயதிலேயே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் பெங்களூரு, லக்னோ, மும்பை, சண்டிகர், சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 முக்கிய நகரங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடம் போதைப் பழக்கம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 6,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது தேசிய மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. அதில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் சராசரியாக 12.9 வயதிலேயே, அதாவது 13 வயதுக்கு உட்பட்ட பருவத்திலேயே போதைப் பொருட்களுக்கு அறிமுகமாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, பசை, பெயிண்ட் மற்றும் பெட்ரோல் போன்ற வாசனையை நுகரும் ஆபத்தான போதைப் பழக்கம் 11 வயதிலேயே தொடங்கிவிடுவது ஆய்வாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 15.1 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. புகையிலை மற்றும் மதுபானத்தைத் தவிர்த்து, அபின் மற்றும் கஞ்சா போன்றவையும் மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் வகுப்பு படிநிலை ஏற ஏற போதைப் பழக்கமும் அதிகரிக்கிறது என்றும், 8ம் வகுப்பு மாணவர்களை
விட 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், ‘கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் புகையிலை மற்றும் மதுபானம் மிக எளிதாகக் கிடைக்கிறது; எனவே ஆரம்பப்பள்ளி நிலையிலேயே விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளனர்.
