×

மாவு அரைக்கும் போது கிரைண்டர் தீப்பிடித்து வீட்டில் பொருட்கள் எரிந்து நாசம்

விகேபுரம்,டிச.15: விகேபுரத்தில் வீட்டில் மாவு அரைக்கும் போது கிரைண்டர் தீப்பிடித்ததில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விகேபுரம் அம்பலவாணபுரம் நடுத்தெருவை சேர்ந்த அனந்தராமன் மகன் அபிநவ் (28). இவர் வெளியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை இறந்த பிறகு இவரது தாய் கற்பகம் மட்டுமே விகேபுரத்தில் வசித்து வருகிறார்.

தற்போது விடுமுறைக்காக அபிநவ் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் கற்பகம் கிரைண்டரில் மாவு அரைத்துள்ளார். அப்போது அவர் கிரைண்டரை ஓட விட்டு,விட்டு வெளியே வந்து பக்கத்து வீட்டினரிடம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு கிரைண்டர் தீப்பிடித்து எரிந்தது.

மளமளவென பற்றி எரிந்த தீ, கிரைண்டர், பிளாஸ்டிக் சேர், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்டவை பற்றி எரிந்து புகை மண்டலமாக வீடு முழுவதும் பரவியது. அப்போது அக்கம்பக்கத்தினர், உங்கள் வீட்டில் இருந்து புகை வருவதாக அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஓடி சென்று பார்த்துள்ளார். ஆனால் அவரால் வீட்டிற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு புகை சூழ்ந்து காணப்பட்டது.
உடனடியாக சுதாரித்து கொண்ட மகன் அபிநவ் வீட்டில் உள்ள மின்சாரத்தை துண்டித்து ஜன்னல், கதவுகளை உடைத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். தகவலின் பேரில் அம்பை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வீட்டில் தீ முழுமையாக அணைந்து விட்டதா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மின்கசிவு காரணமாக கிரைண்டர் தீப்பற்றி எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கிரைண்டர் தீப்பிடித்ததில் வீட்டில் பொருட்கள் எரிந்து நாசமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vikepuram ,Abhinav ,Anandaraman ,Vikepuram Ambalavanapuram ,Bangalore ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...