அகமதாபாத் : சமையலில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தியது தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, 23 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது .குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. மனைவி சுவாமி நாராயண பக்தையாக இருப்பதால், சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை தவிர்த்து வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், இது இருவருக்கும் இடையே தொடர் தகராறுகளுக்கு வழிவகுத்தது. அப்போதும் பிரச்சினை தீராததால், குழந்தையுடன் கடந்த 2007ம் ஆண்டு மனைவி, தனது தாய் வீட்டுக்குச் சென்றார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சங்கீதா விஷேன், நிஷா தாக்கூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விவகாரத்தை குடும்ப நல நீதிமன்றத்தில் எதிர்க்கவில்லை என்று தெரிந்ததும், மனைவியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை தவணை முறையில் நீதிமன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
