- திருப்பரங்குன்றம்
- தீபம்
- யூனியன் அரசு
- தமிழ்நாடு அரசு
- பாஜக
- புலனாய்வு அறிக்கை
- மதுரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையாண்ட முறையில் ஒன்றிய அரசு மீது அதிருப்தியும், தமிழ்நாடு அரசுக்கு ஆதரவான மனநிலையும் தமிழக மக்களிடம் உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து கொடுக்கப்பட்ட அறிக்கையால் பாஜ தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில தலைவர் மற்றும் உள்ளூர் பாஜவினர் ஒத்துழைப்பும் எதிர்பார்த்த அளவு இல்லையென்பதால் டெல்லி கடும் கோபத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றக் கூடாது என்றும், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள பகுதியில் (மலை உச்சியில்) தான் தீபம் ஏற்ற வேண்டுமென்றும் பல ஆண்டுகளாக இந்துத்துவா அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தீபம் ஏற்றுவதை கோயில் நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும் என தீர்ப்பாகியுள்ளது.
* திருப்பரங்குன்றத்தில் கலவரம்
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபம் ஏற்றம் வேண்டும் என்று ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டுமென்று உத்தரவிட்டார். ஆனால், மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், டிச. 3ம் தேதி மனுதாரர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் சென்று தீபம் ஏற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் கோயில் தரப்பில் நூற்றாண்டு மரபுகள் படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்பட்டது. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை வைத்து பாஜ, இந்து முன்னணி உள்ளிட்ட மதவாத இந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட முயன்றன. போலீசார் தாக்கப்பட்டனர். பேரிகார்டுகள் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
* கூட்டணி வியூகம்
இதுதொடர்பாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உளவுத்துறையான ‘ஐபி’ தரப்பில் டெல்லி தலைமையகத்திற்கும், உள்துறைக்கும் இரு முறை அறிக்கையளிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜ மற்றும் இந்து அமைப்பினரின் பிரச்னை முன்னெடுப்பால் தேவையற்ற சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தின் சில பகுதிகளில் எதிரொலிக்கலாம் என்பது போலவும் அறிக்கை அளித்துள்ளனர். இந்த அறிக்கை கிடைத்தும், உடனடியாக உள்துறை அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர் வரவுள்ள தேர்தலை நோக்கி கூட்டணிக்கான வியூகம் அமைத்துவரும் நிலையில் மாநிலம் முழுவதும் கலவரம் போன்ற சூழல் ஏற்படலாம் என்பதாலும், இதனால், தங்களுக்கு அரசியல்ரீதியாக பயன்படும் என்பதாலும் இந்த போராட்டத்தை தீவிரமாய் முன்னெடுக்க வேண்டுமென டெல்லியில் இருந்து மாநில தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* போதிய ஆதரவில்லை…
இதன்பிறகே இரண்டாம் நாளான டிச. 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடந்த பகுதிக்கு பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ேடார் வேகமாய் விரைந்துள்ளனர். ஆனால், திருப்பரங்குன்றம் பகுதியிலோ, மதுரை மாவட்ட அளவிலோ பாஜவின் இந்த முன்னெடுப்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஆட்களும் சேரவில்லை. கைதாகும் வாய்ப்பு உள்ளதாலும், அமைதியான முறையில் நடக்கும் திருவிழாவை தேவையற்ற முறையில் கலவரமாக்க முயற்சிப்பதையும் திருப்பரங்குன்றம் உள்ளூர் மக்களும், மதுரை மாவட்ட மக்களும் விரும்பாத நிலையில், பாஜவினருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
* எடுபடாத போராட்டம்
வெளியூர்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் மட்டுமே திரண்டதும், பாஜவின் இந்த போராட்டத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாததும் நயினாரை பெரிதும் வருத்தமடைய செய்துள்ளது. இதனால், தலைமையின் உத்தரவை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதானதாக தலைமைக்கு அறிக்கையளித்ததோடு நயினாரும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கைவிட்டுச் சென்றுவிட்டார். இதேபோல் டிச. 5ம் தேதி இந்து அமைப்புகளின் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதை வியாபாரிகளும், பொதுமக்களும் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வழக்கத்தைவிட அதிக கூட்டமும், வியாபாரமும் நடந்தது தான் மிச்சம். அதே நேரம் திருப்பரங்குன்றம் மலையில் மரபுப்படி, வழக்கமாக ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றுவதிலும், தேவையற்ற வகையில் வேறு எங்கும் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருந்த தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றம் வரை உடனடியாக சென்றது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை மதுரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
* மதரீதியாக எடுத்தது தவறு
திருப்பரங்குன்றம் விவகாரம் கிளம்பியது முதல், ஒன்றிய உளவுத்துறையான ஐபி தரப்பில் தற்போது வரை தினசரி காலை மற்றும் மாலை என இருவேளை அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கடைசியாக அளித்த 4 அறிக்கைகள், ஒன்றிய உள்துறை மட்டுமின்றி பாஜ டெல்லி தலைமையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதில், ‘‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை மதரீதியாக கையில் எடுத்தது தவறு. இந்த விவகாரத்தை பாஜவினரும், இந்து அமைப்பினரும் சரியாக கையாளவில்லை. தமிழ்நாடு அரசுக்கும், இந்து அல்லாத மற்ற மதத்தினருக்கு எதிராகவும் கையாள நினைத்தது தவறு. மேலும், நீதிமன்றம் தேவையின்றி அதிகளவிலான தீவிர உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், எதிர்கொண்ட விதத்தையும் மக்கள் ஏற்கவில்லை. கலவரரீதியாகவும், மதரீதியாகவும் பிரச்னையை பார்க்க மக்கள் விரும்பவில்லை.
* தமிழக அரசுக்கு வரவேற்பு
இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை. குறிப்பாக பெரும்பாலான மதுரை மாவட்ட பாஜவினரே இந்த போராட்டத்தை விரும்பவில்லை. திருப்பரங்குன்றத்தில் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தது தவறு. கடை அடைப்பு போராட்டத்திற்கு நேரில் போய் கூறியும் வியாபாரிகளும், பொதுமக்களும் பெயரளவிற்கு கூட ஆதரவு தரவில்லை. இதுபோன்ற போராட்ட முன்னெடுப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு வேகம் காட்டியிருக்கத் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக திருப்பரங்குன்றம் விவகாரம் ஒன்றிய அரசுக்கும், பாஜவிற்கும் எதிராக திரும்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஆதரவும் அதிகரித்துள்ளது’’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐபியின் இந்த அறிக்கையைப் பார்த்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் மட்டுமின்றி அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மேல்மட்டத் தலைவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாம் எடுக்கும் முன்னெடுப்புகள் அனைத்தும் கடைசியில் நமக்கு எதிராகவே திரும்புகின்றன. தமிழ்நாட்டில் நமது திட்டத்தை நிறைவேற்ற சரியான திட்டமிடல் இல்லை. மாநில தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சரிவர செயல்படவில்லை என்றும், அமித்ஷா தமிழக பாஜ மேலிட பார்வையாளர்களிடம் கூறியுள்ளதும் தெரியவந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் கிளம்பியது முதல், ஒன்றிய உளவுத்துறையான ஐபி தரப்பில் தற்போது வரை தினசரி காலை மற்றும் மாலை என இருவேளை அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கடைசியாக அளித்த 4 அறிக்கைகள், ஒன்றிய உள்துறை மட்டுமின்றி பாஜ டெல்லி தலைமையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
* பாஜ மற்றும் இந்து அமைப்பினரின் பிரச்னை முன்னெடுப்பால் தேவையற்ற சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தின் சில பகுதிகளில் எதிரொலிக்கலாம் என்பது போலவும் அறிக்கை அளித்துள்ளனர்.
* எதிர் வரவுள்ள தேர்தலை நோக்கி கூட்டணிக்கான வியூகம் அமைத்துவரும் நிலையில் மாநிலம் முழுவதும் கலவரம் போன்ற சூழல் ஏற்படலாம் என்பதாலும், இதனால், தங்களுக்கு அரசியல்ரீதியாக பயன்படும் என்பதாலும் இந்த போராட்டத்தை தீவிரமாய் முன்னெடுக்க வேண்டுமென டெல்லியில் இருந்து மாநில தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
