செய்யாறு: செய்யாறு அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றிருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடி ெசன்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி (63). இவர் கடந்த 8ம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக கடந்த 7ம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது மகன் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை மல்லிகேஸ்வரி வீடு திரும்பினார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பரண் மீது வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மல்லிகேஸ்வரி தூசி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்ெபக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
