×

கோவை செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!

கோவை : கோவை காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பூங்காவில் அமைக்கபட்டுள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகளை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை‌, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ, பல்வேறு இடங்களில் செல்பி பாயிண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் சில பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. செம்மொழி பூங்கா காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பூங்காவைக்காண 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.15 நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. செம்மொழி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள மாதந்திரக்கட்டணம் ரூ.100, குறும்படம் எடுக்க நாளொன்றுக்கு ரூ.2,000, திரைப்பட சூட்டிங்கிற்கு நாளொன்றுக்கு ரூ.25,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

Tags : Goa Semmozhi Park ,KOWAI ,CHEMMOZHI PARK ,KOWAI KANDHIPURA ,Chief Minister of India ,Chemmoshi Park ,Gowai Gandhipuram ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம...