சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்ஐஆர் மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 45 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் எஸ்ஐஆர் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்ஐஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் அதாவது நாளையுடன் முடிகிறது.
வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா? என்பதை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் நேற்று வரை நடந்த எஸ்ஐஆர் பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் இதுவரை 99.55 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் இதுவரை 6 கோடியே 38 லட்சத்து 25ஆயிரத்து 624 படிவங்கள் பதிவேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் மூலம் இதுவரை 99.55 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுவரை படிவம் வழங்காத வாக்காளர்கள் நாளைக்குள் வழங்கவில்லை என்றால் அவர்களது பெயர்கள் நீக்கப்படும்.
