மர்கவோ: ஏஐஎப்எப் சூப்பர் கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி, எப்சி கோவா அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து அசத்தியுள்ளது. ஏஐஎப்எப் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டிகள் கோவாவில் நடந்து வந்தன. போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட எப்சி கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்த அணிகள், மர்கவோ நகரில் நடந்த இறுதிப் போட்டியில் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதியும், கோல் கீப்பர்களின் சிறப்பான ஆட்டத்தால் 120 நிமிடங்கள் முடிந்த பின்பும் கோல்கள் போட முடியவில்லை. அதையடுத்து, பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதிலும் இரு தரப்பு வீரர்களும் அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தினர். இருப்பினும், கடைசியில், கோவா அணி, 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. கோவா எப்சி அணி வெல்லும் 3வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
