- மீன்ச்சூர்
- பொன்னேரி
- மீஞ்சூர்-வண்டலூர்
- இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம்
- LPG எரிவாயு முனையம்
- புட்நகர்
- மீன்ஹூர்
பொன்னேரி: மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் இன்று காலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவன எல்பிஜி காஸ் முனையம் உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரியில் காஸ் ஏற்றி கொண்டு, தென்காசியை சேர்ந்த முருகன் என்பவர் இன்று காலை ஆந்திர மாநிலம், கடப்பா பகுதிக்கு புறப்பட்டார்.
இந்த லாரி, மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை வளைவில் திரும்பும்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் டிரைவர் முருகன் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து போக்குவத்து போலீசார் விரைந்து வந்து முருகனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், அப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் எண்ணெய் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டன. பின்னர் டேங்கர் லாரியை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சோதனை செய்தபோது, டேங்கரில் இருந்து கசிவு எதுவும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, டேங்கர் லாரியை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் பரபரப்பு நிலவியது.
