தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நாளை முதல் டி.20 போட்டி; கட்டாக்கில் இந்திய அணியுடன் இணைந்த சுப்மன் கில்: ஹர்திக் பாண்டியா தனியாக தீவிர பயிற்சி

கட்டாக்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என தென் ஆப்ரிக்கா கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. தொடர்ந்து நடந்த 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ராய்ப்பூரில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வென்றன. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த 3வது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது.

அடுத்ததாக இரு அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி நாளை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்தியா, தென்ஆப்ரிக்கா அணியினர் நேற்று கட்டாக் வந்தடைந்தனர். இன்று காலையில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். மாலையில் தென் ஆப்ரிக்க அணியில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனும், டி.20 அணிக்கான துணை கேப்டனுமான சுப்மன் கில்லும் நேற்றிரவு கட்டாக் வந்தடைந்தார். கழுத்துவலி காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்காத அவர் டி.20 அணியில் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதியுடன் இருந்தால் அவர் முதல் டி.20 போட்டியில் ஆடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் நாளை களம் இறங்க தயாராக உள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான 32 வயதான ஹர்திக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் 26ம்தேதி துபாயில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் சுமார் 3 மாதம் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது முழு உடற்தகுதியை பெற்றுள்ளார். நேற்று முன்தினமே கட்டாக் வந்தடைந்த அவர் நேற்று முதல் போட்டி நடைபெற உள்ள பராபதி மைதானத்தில் தனியாக பயிற்சி பெற்றார். 20 நிமிடம் பவுலிங் பயிற்சி செய்த அவர், 20 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் பேட்டிங் பயிற்சி செய்தார். ஒருநாள் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா டி.20 போட்டியில் ஆடுவது பவுலிங்கில் இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும்.
மறுபுறம் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்ரிக்க அணியில் டிகாக், டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,ரீசா ஹென்ட்ரிக்ஸ் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.

அதிரடி வீரர் டேவிட் மில்லர், வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குதிரும்பி உள்ளனர். மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ்,லுங்கி நிகிடி ஆகியோர் பவுலிங்கில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பர். அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் டி.20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. அதற்கு முன் இந்தியா 10 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதனால் இந்ததொடர் உலக கோப்பைக்காக அணி தேர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்திய டி.20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன்கில்(து.கே). அபிஷேக்சர்மா, திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம்துபே, அக்சர்பட்டேல், ஜித்தேஷ் சர்மா(வி.கீ.), சஞ்சு சாம்சன்(வி.கீ.) பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், குல்தீப், ரானா, வாஷிங்டன் சுந்தர்.

இதுவரை நேருக்கு நேர்….
* டி.20 போட்டிகளில் இந்தியா -தென்ஆப்ரிக்கா இதுவரை 31 முறை மோதி உள்ளன. இதில் 18ல் இந்தியா, 12ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 4, தென்ஆப்ரிக்கா 1ல் வென்றுள்ளன.
* தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த ஆண்டு நவ.15ம் தேதி 283/1ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும். அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 227/3 ரன் தான் (இந்தூர், 2022) சிறந்த ஸ்கோர்.
* கட்டாக்கில் இதற்கு முன் 3 டி.20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 1 வெற்றி (இலங்கைக்கு எதிராக), 2தோல்வி (தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக) அடைந்துள்ளது. தென்ஆப்ரிக்கா இங்கு இந்தியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வென்றுள்ளது.

Related Stories: