×

திருத்தணி முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் இடத்தில் திடீர் தீ: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக காவடி எடுத்தும் முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் எதிரில் மாடவீதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரும்பிலான பலகை உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு பெண்கள் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அருகருகில் இருந்த தீபங்கள் சேர்ந்து தீ பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கரும்புகை எழுந்தது. இதனால் அங்கிருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thirutani Murugan temple ,Thirutani ,
× RELATED கொடைக்கானல் ஏரிசாலை நடைமேடையில் காக்கைக்கு போக்குகாட்டிய எலி