புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினரே பணியை தொடரலாம்: நுகர்வோர் குறைதீர் ஆணைய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: நாகர்கோவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினராக எஸ்.நாகேந்திரன் கடந்த 2022 ஏப்ரல் 30ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள் அல்லது 65 வயது. இந்நிலையில், கடந்த ஜூன் 29ம் தேதி நாகேந்திரன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தனது பணிக்காலத்தை நீட்டிக்க கோரி நாகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, புதிய விதிகளின்படி 65 வயது ஆனாலும் புதிய உறுப்பினர் நியமிக்கப்படும் வரை பணியை தொடரலாம். ஆனால், புதிய உறுப்பினர் நியமிக்கப்படாமல் மனுதாரரை பணியிலிருந்து விடுவித்துள்ளனர். இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் தலைவர் அல்லது உறுப்பினரின் பதவிக்காலம் முடிந்தாலும் அந்த பணிக்கு புதிய நபர் தேர்வாகும் வரை அவர்கள் பணியை தொடரலாம். மனுதாரரின் பணி 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதுவரை நாகர்கோவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு உறுப்பினர் நியமிக்கப்படாததால் அவரை பணியிலிருந்து விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய உறுப்பினர் நியமிக்கப்படும்வரை அவர் பணியை தொடரலாம் என்று உத்தரவிட்டார்.

Related Stories: