உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு திருப்பரங்குன்றம் வழக்கு ஒத்திவைப்பு: சிஐஎஸ்எப்பை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

 

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்திவைத்தார். மதுரை மாவட்டம் எழுமலை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருக்கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவது உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது. எனவே, பாரம்பரியமான தூபத்துணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். ஆனால், 100 ஆண்டுகள் மரபுபடி மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் ராம.ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு மனு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். மனுதாரர் சென்ற போது கலெக்டர் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் யாரையும் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. அவர் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, இந்த வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘144 தடை உத்தரவை ரத்து செய்து உடனடியாக தீபதூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதற்காக மனுதாரர்கள் உட்பட 10 பேர் மலைக்கு சென்று தீபம் ஏற்றலாம். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கை நேற்று காலை கலெக்டர், போலீஸ் கமிஷனர் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அதன்படி, மனுதாரர்கள் மற்றும் பாஜ, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்த ஏராளமானோர் மலை மீது தீபம் ஏற்ற சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, ‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. இதனால் யாரையும் அனுமதிக்க முடியாது’ என திருப்பி அனுப்பினர். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆஜராகவில்லை. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ‘‘தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தரப்பில் திருப்பரங்குன்றம் சென்றது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை டிச. 9க்கு தள்ளி வைத்தார். மனுதாரர் தரப்பில், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாததால் இந்த வழக்கில் ஒன்றிய உள்துறையையும் சேர்க்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நீதிபதி நிராகரித்து விட்டார்.

*  தீபம் ஏற்றப்பட்ட வரலாறு

திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் முருகன் கோயில் அமைந்துள்ளது. உச்சிப்பிள்ளையார் ேகாயில் கட்டப்பட்டுவதற்கு முன் கோயிலின் மேலே மலையின் நடுப்பகுதியில் உள்ள பாரம்பரிய தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 19ம் நூற்றாண்டில் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் கட்டப்பட்டப் பிறகு, அதிலிருந்து அங்குள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மேல் பகுதியில் சிக்கந்தர் தர்காவின் முன்பகுதியில் ஆங்கிலேயர் காலத்து நில அளவைக்கல் உள்ளது.

சர்வே கல்லான இதைத்தான் தீபத்தூண் என்று தற்போது இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். இந்தக்கல் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கல்த்தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை இதற்கு முன்பாக இருந்தது இல்லை. இந்த தீபத்தூண் செல்ல வேண்டுமென்றால் தர்கா வழியாக தான் செல்ல முடியும். தர்காவில் இருந்து 15 மீட்டரில் இந்த தீபத்தூண் உள்ளது. தர்காவுக்கு மிக அருகே உள்ள இங்கு தீபம் ஏற்ற அனுமதித்தால், தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும் என்பதாலும், இதற்கு முந்தைய நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும் தான் தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்துள்ளது.

  •  மதுரை எப்போதும் அமைதியின் பக்கம்: சு.வெங்கடேசன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்! – இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!’’ என குறிப்பிட்டிருந்தார். முதல்வரின் இந்த பதிவிற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ள பதில் பதிவில், ‘‘அமைதி தவழும் தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்ற அனுமதியோம். மதுரை எப்போதும் அன்பின் பக்கம், அமைதியின் பக்கம், வளர்ச்சியின் பக்கமே’’ என குறிப்பிட்டுள்ளார்.

  • கலவரத்தை தூண்ட முயற்சி நயினார், 112 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ள நிலையில், ஐகோர்ட் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கோரி பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜவினர் நேற்று முன்தினம் இரவு திருப்பரங்குன்றம் பழநியாண்டவர் கோயில் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மலையேற முயன்ற நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜவினர் என 113 பேரை கைது செய்து இரவில் விடுவித்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் போலீசார் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட 113 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், பொது அமைதியை கெடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: