தீபத்தூணில் ஏற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை: கோயில் நிர்வாகம், மதுரை கலெக்டர் மேல்முறையீடு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் செயல் அலுவலர், மதுரை கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், மேல்முறையீட்டு மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உரிமை கோர தனிநபருக்கு எவ்விதமான சட்ட உரிமையும் இல்லை. கார்த்திகை தீபத்தை எங்கு ஏற்றுவது என்பது குறித்தோ அல்லது இடத்தை மாற்றுவது தொடர்பாகவோ தேவஸ்தானம் மட்டுமே முடிவெடுக்க இயலும் என 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உறுதி செய்கிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள மண்டபத்திலேயே மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத்தூணில் அல்ல.

தீபத்தூணில் ஏற்றப்பட்டதற்கான ஆவணங்களோ பதிவேடுகளோ, கல்வெட்டுகளோ, ஆகம தரவுகளோ எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் மனுதாரர் பாரம்பரியமான தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று கூற இயலாது. தனிப்பட்ட நபருக்கு வழிபடும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் கோயிலின் பழக்க வழக்கங்களை மாற்ற தனிநபருக்கு எவ்விதமான உரிமையையும் வழங்கவில்லை. அதோடு தீபத்தூண் மதப் பிரச்னை உருவாகக்கூடிய, பிரச்னைக்குரிய எல்லைக்குள் உள்ளது. இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் தீபத்தை தனி நீதிபதி தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதோடு தனிநபரை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது சட்டவிரோதமானது. இது ஆகம விதிகளுக்கும், முந்தைய உத்தரவுகளுக்கும் எதிரானது. ஒரு பக்தர் எந்த சூழ்நிலையிலும் அது மாதிரியான உரிமையை கோர இயலாது. ஆகவே திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், வீராகதிரவன், கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, ‘‘இந்த வழக்கு முக்கியமானது என்பதால், இனிமேல் புதிதாக இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டாம்’’ என கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘அனைத்து வழக்குகளையும் சேர்த்து புதன்கிழமை விசாரிக்கலாமா?’’ என்றனர். இதற்கு அரசுத்தரப்பில் வெள்ளிக்கிழமைக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘வெள்ளிக்கிழமையா, புதன்கிழமையா? என்றைக்கு விசாரிக்கலாம்? நீதிமன்றம் அனைவருக்கும் பொதுவானது என்பதால், அனைவரிடமும் கேட்கிறோம். விரும்புவோர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அனைத்து மனுக்களும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும். அதன் பின்னர் தாக்கலாகும் மனுக்கள் ஏற்கப்படாது’’ என்றனர்.

அரசு தரப்பில், ‘‘சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விவரங்கள் பகிரப்படுவதை தடுக்க அறிவுறுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘‘நீங்கள் அனைவரும் நீதிமன்ற அலுவலர்கள். பொறுப்புடையவர்கள். நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமளவுக்கு இல்லாமல், சரியாக நடந்து கொள்ளுங்கள். பிறருக்கும் அறிவுறுத்துங்கள். நீதிமன்றமும், நீதிபதிகளும் ஏதும் சொல்லவில்லை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என நினைக்காதீர்கள். இந்த நீதிமன்றமே அனைத்திற்கும் கடைசி நிவாரணம்.

நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை குறித்து பொதுவெளியில், சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது’’ எனக் கூறி விசாரணையை டிச. 12க்கு தள்ளி வைத்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை குறித்து பொதுவெளியில், சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

* திருக்கார்த்திகை தவிர்த்து மற்ற தினங்களில் தீபம் ஏற்றக்கூடாது: திருப்பரங்குன்றம் கோயில் அர்ச்சகர்கள் அரசுக்கு கடிதம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மத்தியில், பிரசித்தி பெற்ற கோயில்களின் பட்டர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் கோயிலின் தலைமை குருக்களும், கற்பக விநாயகர் வேத ஆகம வித்யாலயம் முதல்வரும், சிவநெறி கழகம் துவைக்கியவரும் சிவ கே.பிச்சை குருக்கள் தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘‘சிவாகமங்களில் கூறியபடி திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கோயில்களில் தீபமேற்றி வழிபடுவது தான் வழக்கம் என்பதையும், இதர நாட்களில் இவ்வழிபாடு செய்வது வழக்கத்திற்கு மாறானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருப்பரங்குன்றம் கோயில் அர்ச்சகர்கள், கோயில் துணை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்த ஆண்டு கடந்த 3ம் தேதி (திருக்கார்த்திகையன்று) மாலை 6 மணியளவில் கோயில் வழக்கப்படி பாலதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அதே நேரத்தில் வழக்கமாக தீபம் ஏற்றக்கூடிய உச்சிப்பிள்ளையார் கோயில் தீபமண்டபத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. இதுதவிர, மற்ற நாட்களில் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.

* மதத்தை வைத்து குழப்பம் தமிழ்நாட்டில் பலிக்காது: துணை முதல்வர்
திருவண்ணாமலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘திருப்பரங்குன்றம் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். மதத்தை வைத்து இங்கு குழப்பத்தை ஏற்படுத்த நினைப்போரின் ஆசை தமிழ்நாட்டில் பலிக்காது. இது திராவிட மண். தமிழ் மண். நிச்சயம் அதற்கு நமது அரசும் இடம் கொடுக்காது. தமிழ்நாட்டு மக்களும் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்’ என்றார்.

* ஊர்வலமாக சென்று போலீசில் புகார்
பாஜகவினரின் கடை அடைப்பு போராட்ட அழைப்பிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் திருப்பரங்குன்றம் நகர கடை உரிமையாளர்கள் ஊர்வலமாக சென்று திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் மனு அளித்தனர். மனுவில், ‘`வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் கடைகளை அடைக்க யாரும் நிர்பந்தம் செய்யக்கூடாது. அதை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கடைகளை திறந்து வைக்க போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவித்தனர். ஊர்வலத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சியினர் கலந்துகொண்டனர்.

* ‘மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல சர்வே கல்’
தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள ஒரு கல் தீபத் தூண் என தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அது தீபத்தூண் அல்ல. அது ஒரு சர்வே கல்லாகும். அதை தியோடலைட் ஸ்டோன் என்பர். வெள்ளையர்கள் காலத்தில் மலையை சர்வே செய்தனர். சர்வே பணிகளின் போது மலைப்பாங்கான உச்சிப்பகுதிகளில் இதுபோன்ற உயரமான கல்லை ஊன்றுவர். இதுபோன்ற கற்கள் மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் நிரம்பியுள்ளன. இது 30 செ.மீ முதல் 240 செ.மீ வரை இடத்திற்கு இடம் வேறுபட்டிருக்கும். இந்த கல்லைத் தான் தற்போது தீபத்தூண் என தவறாக கூறுகின்றனர். சர்வே கல்லை சாமியாக கும்பிடுவதை சினிமாவில் தான் பார்த்தோம். இதை வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது சர்வே எல்லைக் கல் தான் என்பதை தமிழ்நாடு அரசு அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: