மதுரையின் வளர்ச்சிக்காக அங்குள்ள மக்கள் கேட்பது மெட்ரோ-எய்ம்ஸ்-வேலைவாய்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: மெட்ரோ ரயில், எய்ம்ஸ், வேலைவாய்ப்பு. இவைதான் மதுரையின் வளர்ச்சிக்காக அங்குள்ள மக்கள் கேட்பது என முதல்வர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கேட்டு இந்து முன்னணியை சேர்ந்த ராமரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 3ம் தேதி அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், மலை உச்சியில் உள்ள தீபத் தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் மதுரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உடனடியாக தீபத் தூணில் தீபத்தை ஏற்றுமாறு நேற்று 2வது முறையாக உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் குவிந்த நிலையில், மதுரை காவல்துறையினர் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. அதேபோல், தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 2014ம் ஆண்டு இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வழக்கமாக ஏற்றப்படும் பகுதியில் தீபம் ஏற்றியுள்ளதாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ………. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது. இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: