திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் தமிழ் கடவுள் முருகனின் முதல்படை வீடு அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தரப்பில் மலையில் தீபம் ஏற்றிய பிறகே சுற்றுவட்டார கிராமத்தினர் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். இதற்காக மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கோயில் நிர்வாகம் தரப்பில் தீபம் ஏற்றப்படும். அதேசமயம், சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டுமென பாஜ மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றப்படும். இந்த நடைமுறையை மாற்றி தர்கா அருகே தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் கடை அடைப்பு போராட்டம் நடத்த வேண்டுமென கடந்த இரு நாட்களாக இந்து அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக பாஜவினர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கடைத்தெருக்களுக்குச் சென்று, அங்குள்ள கடைகளில், தங்களது கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கூறியிருந்தனர். இதனால், நேற்றைய கடை அடைப்பு போராட்ட அழைப்பிற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என பாஜ மற்றும் இந்து அமைப்பினர் நினைத்திருந்தனர்.
ஆனால், கோயிலைச் சுற்றியுள்ள கடைகள், ரத வீதிகள், பஜார் வீதிகளில் கடைகள் நேற்று அதிகாலை 5 மணி முதலே வழக்கம்போல திறக்கப்பட்டன. கோயிலுக்கு வந்த பக்தர்களும், உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் கடைத்தெருக்களில் வழக்கம் போல கூடத் தொடங்கினர். தற்போது ஐயப்ப சீசன் என்பதால் வழக்கத்தைவிடவும் கூடுதலான ஆட்கள் நடமாட்டமும், வியாபாரமும் இருந்தது. இதனால், வியாபாரிகள் உற்சாக மனநிலையில் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாகச் சென்று பாஜ மற்றும் இந்து அமைப்பினர் கையெடுத்து கும்பிட்டு கடைகளை அடைத்து தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டனர். ஆனால், அதை வியாபாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதேபோல, முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பாஜகவினரின் போராட்ட அழைப்பை வியாபாரிகளும், பொதுமக்களும் நிராகரித்ததால் அவர்களின் போராட்ட அறிவிப்பு பிசுபிசுத்து போனது. திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 926 சிறப்பு காவல் படையினர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபப் பிரச்னையை வைத்து திருப்பரங்குன்றத்தில் பெரும் அரசியல் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்த பாஜ மற்றும் இந்து அமைப்பினர் இதனால் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.
* பாஜவினரின் செயலால் வியாபாரம் பாதிக்கிறது: பொதுமக்கள், வியாபாரிகள் கருத்து
திருப்பரங்குன்றம் கோயில் முன்பு பூ வியாபாரம் செய்யும் பெரிய நாயகி: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்னையால் சிலர் கடையை அடைக்க சொல்கிறார்கள். தற்போது கார்த்திகை மாதம் ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வருவர். பாஜவினரின் செயலால் வியாபாரம் பாதிக்கிறது. இந்த போராட்டத்தை யாரும் ஆதரிக்கவில்லை.
திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் ராதாகிருஷ்ணன்: இதுவரை திருப்பரங்குன்றம் அமைதியாகவே உள்ளது. இங்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்றாகவே வசிக்கிறோம். தீபம் ஏற்றுவதால் எந்த பிரச்னையும் வரக்கூடாது. இனி வரும் காலங்களிலும் இங்குள்ள மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி: தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையால் மக்கள் மன்றம் என்ற பெயரில் எங்களை இரவு 10 மணிக்கு அழைத்த சிலர் காலையில் கடையை திறக்க வேண்டாம், அடைத்து எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றனர். ஆனால், நாங்கள் திட்டவட்டமாக இந்த விவகாரத்திற்காக கடையை அடைக்க முடியாது என கூறி விட்டோம். இது போன்ற விஷயங்களுக்கு உதவ எங்களால் முன்வர முடியாது, கடையடைக்கவும் முடியாது என்று கூறி விட்டோம்.
திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அபுதாகிர்: திருப்பரங்குன்றம் பகுதியில் இஸ்லாமியர்களும் மற்ற மதத்தினரும் மிகவும் இணக்கமாக நல்ல முறையில் பழகி வருகின்றோம். இங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். வெளியில் இருந்து வரும் சிலரும், சில அரசியல் கட்சியினருமே இங்குள்ளவர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர். திருப்பரங்குன்றம் மக்கள் எப்போதும் மத நல்லிணக்கத்தோடு வாழ்வோம். அதற்கு அரசு எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். நாங்கள் அரசுக்கு துணையாக இருப்போம்.
பாம்பன் நகரைச் சேர்ந்த சையது சுல்தான்: நாங்களும், இந்துக்களும் மாமன், மச்சான், அண்னன், தம்பி என உறவு முறைகளில் பழகி வருகிறோம். எங்களுக்குள் நட்பைத் தாண்டிய உறவு உள்ளது. திருப்பரங்குன்றம் மக்கள் எப்போதும் ஒற்றுமையைத் தான் விரும்புகின்றனர். இங்குள்ள மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற அரசு உதவும் என நம்புகிறோம்.
