கோபியில் ஜெயலலிதா நினைவு நாள்; செங்கோட்டையன் புறக்கணிப்பு: தவெக ஆபீஸ் முன் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கோபி: கோபியில் இன்று நடந்த ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். தவெக ஆபீஸ் முன் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவர் அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கொங்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தவெக அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இதற்காக, கோபி கரட்டூரில் செங்கோட்டையனின் தவெக அலுவலகம் முன்பாக ஜெயலலிதாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் ஜெ.நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

அவரது வருகைக்காக ஏற்பாடு செய்து காத்திருந்த நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.சத்தியபாமா தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே முன்னாள் எம்பி சத்தியபாமா நிருபர்களை சந்தித்தார். அப்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்த அதிமுகவினர் எதிர்ப்பும் விமர்சனம் செய்கின்றனரே என்ற கேள்விக்கு, ‘‘இது போன்ற விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். விமர்சனங்களை பார்த்தால் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர முடியாது’’ என்றார்.

இதற்கிடையே அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ், கோபி கரட்டூரில் உள்ள கே.ஏ.செங்கோட்டையன் தவெக கட்சி அலுவலகம் முன்பு ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு ‘‘என் இதய தெய்வத்திற்கு 9வது ஆண்டு நினைவஞ்சலி’’ என அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: