கோலாலம்பூர்: 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி வரும் 30ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.கடந்த 2014, மார்ச் 8ம் தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம்(எம்எச் 370) மாயமானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் இல்லை.
செயற்கைக்கோள் தரவுகளின்படி, விமானம் அதன் பறக்கும் பாதையிலிருந்து விலகி தெற்கே தொலைதூர இந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றது. அங்கு அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. விமானம் காணாமல் போனதில் இருந்து பல ஆண்டுகளாக விரிவான தேடல்கள் நடத்திய போதும் விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தின் இருப்பிடம் குறித்து நம்பகமான சான்றுகள் வந்தால் மட்டுமே தேடுதல் பணி மீண்டும் தொடங்கும் என மலேசியா,ஆஸ்திரேலியா, சீன நாடுகள் தெரிவித்தன. விமானம் மாயமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தேடும் பணிகளை தொடங்குவதற்கு மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்தநாட்டின் போக்குவரத்து துறை நேற்று தெரிவித்தது.
அமெரிக்காவை சேர்ந்த ஓஷன் இன்பினிட்டி மேற்கொள்ளவிருக்கும் தேடும் பணி வரும் 30ம் தேதி தொடங்கும்.இதற்காக அந்த நிறுவனத்துடன் ரூ.631 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தைக் கண்டுபிடித்தால் தான் கட்டணம் செலுத்தப்படும் என்ற விதிமுறையின்கீழ் ஓஷன் இன்பினிட்டி தேடுதல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
