திருப்பூர், நவ.27: 1957-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவுகளைக் கொளுத்தி வீரமரணம் அடைந்த ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நேற்று திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். தமிழ்நாடு மாணவர் கழகத்தை சேர்ந்த ஈழமாறன், கார்த்திக், வெங்கட், சிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்ற நிர்வாகி சிவகாமி, நவீன மனிதர்கள் குழு பாரதி சுப்பராயன், துரை.பரிமளரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஆதித்தமிழர் கட்சி துணைப் பொதுச்செயலாளர் விடுதலை செல்வன், மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் கார்மேகம், திராவிடர் விடுதலை கழக மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் வீரவணக்கம் நாள் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
