பெரம்பலூர், நவ.26: பெரம்பலூர் நகராட்சி தெப்பக்குளம் அருகே குண்டும் குழியுமான மரணச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் துறையூர் சாலையில் நகராட்சி தெப்பக் குளம் அருகே குடிநீருக்காகவோ அல்லது பாதாள சாக்கடை திட்டத்திற்காகவோ தோண்டப்பட்ட பள்ளம், அவசர கதியில் தார் சாலை போடப்படும் ஜல்லிக் கப்பிகளை கொண்டு மூடப்பட்டது. இதனை பணியாளர்கள் முறையாக செய்யாமல் மேலோட்டமாக ஜல்லி கப்பிகளை, சிப்ஸ்களை கொட்டி விட்டு சென்றதாலும், தொடர் மலையின் காரணமாகவும், கனக வாகனங்களின் அழுத்தம் காரணமாகவும் பணிகள் முடிந்த சில நாட்களிலேயே அங்கு படு குழியாக மாறிப்போனது.
இருசக்கர வாகனத்தின் சக்கரம் அளவிற்கு வட்டமாக படுகுழியாக மாறி நிற்கும் அப்பகுதியை ஏனோ அங்கு பணிகளை மேற்கொண்ட நகராட்சி பணியாளர்கள் அவ்வளவு பயணித்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவ மனைக்கும், அதன் அருகே உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் ஜல்லி தூள்களில் சறுக்கி பள்ளத்தில் குப்புறவிழுந்து படுகாயங்களுடன் எழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் அவலம் உள்ளது. அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் பயணிக்கும் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதை போர்க்கால அடிப்படையில் தடுத்திட, சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
