சென்னை: அகில இந்திய அளவிலான புச்சிபாபு 3 நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. அதில் இ பிரிவு அணிகளுக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியான டிஎன்சிஏ 11, மும்பை அணிகள் மோதின. முதல் நாளான நேற்று மும்பை முதலில் மட்டையை சுழற்றியது. ஆரம்பத்தில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 13, ஹர்ஷ் ஆகவ் 2 என வந்த வேகத்தில் வெளியேறினர். இருப்பினும் முஷீர் கான் 30 ரன் வரை தாக்குப்பிடித்தார். அதன் பிறகு சுவேத் பர்கார், சர்பராஸ்கான் இருவரும் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் விளாசிய சுவேத் 72 ரன்னில் ஆட்டமிழக்க, சதம் வெளுத்த சர்பராஸ் கான் காயம் காரணமாக 138 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு ஆகாஷர் பர்கார் 67, ஹிமான்சு சிங் 20 ரன்னுடன் நேற்று கடைசி வரை களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை 85 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 367 ரன் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. டிஎன்சிஏ 11 தரப்பில் மணிமாறன் சித்தார்த் 2, பிரேம்குமார், லோகேஷ் ராஜ், சோனு யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இன்னும் 5 விக்கெட் கைவசம் இருக்க, மும்பை 2வது நாளான இன்று, முதல் இன்னிங்சை தொடர உள்ளது.
புச்சி பாபு கிரிக்கெட்: சர்பராஸ் கான் சதம் மும்பை ரன் குவிப்பு
- புச்சிபாபு
- சர்பராஸ் கான்
- மும்பை
- சென்னை
- அனைத்து இந்தியாவும்
- மின்-குழு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டிஎன்சிஏ 11
