துறையூர், மே 1: துறையூர் அருகே சிக்கத்தம்பூரில் 2 மாதமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் திடீர் சலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூரை அடுத்து உள்ளது சிக்கதம்பூர் கிராமம் . இந்த கிராமத்தில் அய்யர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கடந்த 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், இந்த குடிநீர் பிரச்னைக்காக சில மாதங்களுக்கு முன்பு இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 20 இடங்களுக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் குடிநீர் இருந்தும் மின் மோட்டார் அமைத்து குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இருந்தும் அதை பயன்படுத்த தங்களால் இயலவில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் குடிநீருக்காக பல கி.மீ. தூரம் நடந்து சென்று குடிநீரை எடுத்து வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள்மற்றும் பொதுமக்கள் நேற்று சிக்கத்தம்பூரில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர்-ஆத்தூர் சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.