×

என் வாழ்க்கை மாறிய தருணம் ஏ.ஆர்.ரஹ்மான் பிளாஷ்பேக்

சென்னை: தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என்று உலகப்புகழ் பெற்றவர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் சிறுவயதில் ஒரு இசைக்குழுவில் இருந்தபோது, மதுபோதையில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர் கூறிய வார்த்தை தன்னுள் எப்படி ஆழமாகப் பதிந்தது என்றும், அது எப்படி தன்னை அறிந்துகொள்ள உதவியது என்பதையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

என் சிறுவயதில் சில இசை அமைப்பாளர்களுக்கு நான் வாசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு இசைக்குழுவில் இருந்தேன். அப்போது ஒருமுறை அந்தக் குழுவில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர், அளவுக்கதிகமான மதுபோதையில் என் பக்கம் திரும்பி, `என்ன இசைக்கிறீர்கள்? நீங்கள் இசைப்பது சினிமா இசை’ என்றார். அது 1985ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவர் என்ன சொன்னார் என்பதை நான் உணரவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு அது என்னை மிகப்பெரிய அளவில் தாக்கியது.

பிறகுதான் அவர் சொன்னது சரி என்பதை உணர்ந்தேன். என்னைப் பற்றி அது ஆழமாக யோசிக்க வைத்தது. அப்போதுதான், நான் வாசிக்கும் இசை அமைப்பாளர்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இதை தொடர்ந்து அதிலிருந்து நான் மெதுவாக விலக ஆரம்பித்தேன். இசையில் எனது பாணி எதுவென்று அடையாளம் காணும் பயணம் தொடங்கியது.

ஆனால், அந்த தாக்கத்தில் இருந்து முழுமையாக வெளியேற 7 ஆண்டுகள் ஆனது. அந்த கிட்டாரிஸ்ட் எதுவும் தவறாக சொல்லவில்லை. சில நேரங்களில் சில கருத்துகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவை, குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து வெளியேற சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது என் சொந்த தாக்கத்தில் இருந்து விலகவும் எனக்கு உதவி செய்தது. அதாவது, என் இசையின் ஆன்மாவை நான் புதுப்பித்துக் கொண்டேன்.

Tags : A.R. Rahman ,Chennai ,Bollywood ,Hollywood ,
× RELATED ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயங்கிய நடிகை: வெளிநாட்டில் நிமோனியா பாதிப்பு