×

கடலூர் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

கடலூர், ஜூலை 16: கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரயில் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சிதம்பரம் வந்தடைந்தார். இந்த பயணத்தின்போது கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், அவற்றை உடனடியாக நிறைவேற்றி கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான்சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி ரூ.20 கோடி செலவில் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் உள்ள அனைத்து பழங்குடியினரும் பயன்பெறும் வகையில், கடலூர் வட்டத்தில் உள்ள அரிசிபெரியாங்குப்பத்தில், புதிய உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி தொடங்கப்படும்.

காட்டுமன்னார்கோவில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும். வீராணம் ஏரிப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சோழதரத்தில் இருந்து ராஜமதகு வரை படகு சவாரி மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும், ரூ.10 கோடி செலவில் ஏரி தூர்வாரும் பணிகளும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வனின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கூடுவெளி சாவடியில் புதிய திறன் மேம்பாட்டு நிலையமும், தொழிற்பேட்டையும் அமைக்கப்படும்.

மேலும், நேற்று இளையபெருமாளின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில், 150 ஏக்கர் பரப்பளவில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா ரூ. 75 கோடி செலவில் அமைக்கப்படும், என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post கடலூர் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Cuddalore ,Chidambaram ,Mayiladuthurai ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்