×

போதுமான அளவு குடிநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது :அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னை : சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும்.எந்த இடங்களில் உடனடி தேவை என்பதைக் குறிப்பிட்டால் உடனடியாக முன்னுரிமை தந்து பணிகள் முடிக்கப்படும்.

சென்னைக்கு தேவையான குடிநீர் கொள்ளளவு 13.22 டிஎம்சி; ஆனால் தற்போது 15.560 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளது. போதுமான அளவு குடிநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் 2025ம் ஆண்டின் 7வது மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. திமுக ஆட்சிக்கு வந்தபோது சென்னையில் குடிநீர் 900 எம்.எல்.டி வழங்கப்பட்டது. தற்போது 1,040 எம்.எல்.டி. அளவு குடிநீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அம்பத்தூர் மாதானங்குப்பத்தில் பாதாள சாக்கடை அமைக்க திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. நிதிநிலைக்கு ஏற்ப டெண்டர் கோரப்பட்டு பணி தொடங்கும். கும்பகோணம் மாநகராட்சிக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நிதி ஒதுக்கும்போது மழைநீர் வடிகால் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post போதுமான அளவு குடிநீர் இருப்பு உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது :அமைச்சர் கே.என்.நேரு உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,K. N. Nehru ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்சனை இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு