திண்டுக்கல், ஜன. 7: திண்டுக்கல் கறிக்கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனை ஈடுபட்டதில் 250 கிலோ கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பழநி பைபாஸ் ரோட்டில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, வசந்தன், ஜஸ்டின் அமல்ராஜ், சரவணன் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்தக் கடைகளில்கெட்டுப்போன ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன் போன்றவை இருந்தன. இதில் முருகப்பெருமாள் என்பவரது கடையில் 250 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து ரூ. 5000 அபராதம் விதித்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் கோழி மற்றும் மீன் விற்ற 15 கடைகளுக்கு தலா ரூ 2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இறைச்சி கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கூறியதாவது, ‘‘திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.
The post திண்டுக்கல்லில் கெட்டுப்போன 250 கிலோ இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.