வேலூர், ஜன.9: காட்பாடி அருகே இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹38 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பியிடம் புகார் மனுகள் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்பி மதிவாணன் தலைமை தாங்கினார். ஏடிஎஸ்பிகள் பாஸ்கரன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். இவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அதில், காட்பாடி டி.கே.புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய நிலத்தை அபகரித்தது தொடர்பாக கடந்த வேலூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு மற்றும் குறைதீர்வு கூட்டத்தில் பல முறை மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை அந்த மனுக்களின் மீது எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. நேரில், செல்போனிலும் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டால் உரிய பதில் அளிப்பதில்லை. எனவே மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்படுகிறேன். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
காட்பாடி அடுத்த கிரிகிரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, கே.வி.குப்பம் மற்றும் சத்துவாச்சரியை சேர்ந்த 4 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசுத்துறையில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று தெரிவித்தனர். அதனை உண்மை என்று நம்பி நாங்கள் 6 பேரும் வங்கிக்கணக்கு மற்றும் நேரடியாகவும் மொத்தம் ₹38 லட்சம் கொடுத்தோம். ஆனால் 4 பேரும் வேலை வாங்கி தருவதாக காலம் கடத்தி ஏமாற்றினர். கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்து வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ₹38 லட்சம் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹38 லட்சம் மோசடி குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பியிடம் புகார் காட்பாடி அருகே இளைஞர்களிடம் appeared first on Dinakaran.