புதுடெல்லி: மோடி தலைமையிலான பாஜ அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் தான் இந்தியாவில் முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் தயக்கம் காட்டுகின்றனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்றிய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்தநிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், மோடியின் ஆட்சியில் இந்தியாவில் முதலீட்டு சூழல் மந்தமாகவே உள்ளது. உள்நாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும். மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்த 10 ஆண்டுகளில் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 32 சதவீதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் 29 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
நாட்டில் முதலீடு மந்தமாக உள்ளது. வெகுஜன நுகர்வு வேகமடையவில்லை. வரி மற்றும் பிற துறை அதிகாரிகள் வணிகர்களை அச்சுறுத்துகிறார்கள். மோடி ஆட்சியில் நான்கு ஐந்து வணிகக் குழுக்கள் மட்டுமே வளர முடியும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. இந்த ஆட்சியில் தனியார் துறையினரும் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர் என்ற தகவலும் தற்போது வந்துள்ளது. நிகர அன்னிய நேரடி முதலீடு இந்த ஆண்டு (2024) ஏப்ரல்-அக்டோபரில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது. மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் தேக்கமடைந்துள்ளன. இந்திய நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீடு செய்வதை விட வெளிநாட்டில் முதலீடு செய்வதை அதிகளவில் தேர்வு செய்கின்றன. இது மோடி அரசின் மீது கார்ப்பரேட் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
The post மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் முதலீடு செய்ய தனியார் துறை தயக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.