×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க கோரி வழக்கு :மதுரை ஆட்சியருக்கு நோட்டீஸ்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்கக்கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜன.14ம் தேதி தைப் பொங்கலன்று நடைபெற உள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்தும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஆண்டு நீதிமன்றம், தமிழர்களின் கலாச்சார விழாவான ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
பல இடங்களில் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க பட்டியல் சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து ஜல்லிக்கட்டை நடத்துவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஆகவே அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு, கடைசி நேரத்தில் நிவாரணம் கோரினால், எவ்வாறு வழங்குவது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.10) ஒத்திவைத்தனர்.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க கோரி வழக்கு :மதுரை ஆட்சியருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Avaniyapuram Jallikattu ,Madurai Collector ,Madurai ,High Court ,Jallikattu ,Avaniyapuram, Madurai district ,Thai Pongal ,Madurai district ,Dinakaran ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...