×

குளிர்கால சரும வறட்சியைப் போக்க!

நன்றி குங்குமம் டாக்டர்

குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் நீர்சத்துக் குறைவதுதான். தினசரி நமது உடலுக்கு தேவையான நீரை அருந்தாதபோது அல்லது திரவ உணவுகளை உட்கொள்ளாத போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், சிலருக்கு கால்கள், கைகள் மற்றும் முகம் வறண்டு காணப்படும். சிலருக்கு குதிகால் வெடிப்பு மற்றும் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவதும் உண்டு. இதுபோன்ற சரும பிரச்னைகளை போக்க சில எளிய வழிகளை பார்ப்போம்:

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வறண்ட சருமத்தை போக்கவும் உதவுகிறது. அதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவதும் அவசியமாகும். பொதுவாக குளிர்காலத்தில் சளி பிடிக்கும் என்பதால் பலரும் எண்ணெய் தடவி குளிப்பதை தவிர்த்துவிடுவார்கள். ஆனால், பருவநிலை எதுவாக இருந்தாலும், எண்ணெய் தடவி குளிப்பது சருமத்திற்கு நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது மற்றும் சருமத்தின் வறட்சியை நீக்குகிறது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் எதுவாக இருந்தாலும் அதை டபுள் பாயிலிங் முறையில் லேசாக சூடாக்கிய பிறகு, உடலில் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு, 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். அதன் பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிக்க, இது சருமத்தை மென்மையாக்கவும், வறண்ட சருமத்தை நீக்கவும் உதவும்.

நெய் சருமத்திற்கு நன்கு ஊட்டமளிக்க உதவுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை உட்கொள்ள சருமம் வறண்டு போவதை தடுக்க உதவும். சரும பிரச்னைகள் தவிர, சிலருக்கு அதிக குளிர்ச்சி ஏற்பட்டால் முதுகுவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நெய்யின் பயன்பாடும் இதைக் குறைக்க உதவுகிறது. மதியம் நெய்யுடன் சாதம் சேர்த்து சாப்பிடலாம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

பாதாம் எண்ணெய் சருமத்தை பராமரிக்க உதவும் மற்றொரு எண்ணெயாகும். இது சருமத்தை நன்கு ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. சரும பிரச்னைகளுக்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் முகப்பரு மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதாம் எண்ணெயை சருமத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். அல்லது சிறிது பாலில் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இதை இரவில் படுக்கும் முன் குடிப்பதால் சரும வறட்சி நீங்கும்.

வறண்ட சருமத்தைப் போக்க சிறந்த வழிகளில் ஒன்று ஆரஞ்சுத் தோல். இது சருமத்திற்கு ஊட்டமளித்து மென்மையாக இருக்க உதவுகிறது. அதேபோல், ஆரஞ்சு தோலுடன் பேஸ்பேக் பயன்படுத்துவதும் நல்லது. ஆரஞ்சு தோலை எடுத்து காயவைத்து அரைக்கவும். தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவுவது நல்லது. பழுத்த வாழைப்பழங்கள் முகப்பொலிவை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய மிகச்சிறந்த பொருள் ஆகும். ஏனெனில் வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன.

இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். இளமையிலேயே வயதானது போன்ற தோற்றத்தை சரி செய்வதற்கும் இந்த வாழைப்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுவதால் இயற்கையான மாய்ஸ்சரைசராக அது செயல்படுகிறது. எனவே வறண்ட சருமத்தை சரி செய்வதற்கு வாழைப்பழ ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். ​வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.

தயிரில் லாக்டிக் அமிலம் அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. நமது சருமம் பளபளப்பாகவும் நீர்ச்சத்துடனும் இருக்க ​தயிருடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் மாதிரி குழைத்துக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் சுத்தமான நீரில் கழுவிக்
கொள்ளவும்.

பொதுவாக சரும பராமரிப்பு பொருட்களில் கற்றாழை மற்றும் வெள்ளரிச்சாறு பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையில் உள்ள பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சியை தடுப்பதற்கான பல பண்புகள் இதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. கற்றாழை ஜெல் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிக்கொள்ள சரும வறட்சி நீங்கும்.

தொகுப்பு: ரிஷி

The post குளிர்கால சரும வறட்சியைப் போக்க! appeared first on Dinakaran.

Tags : Kungumam ,Dinakaran ,
× RELATED குடி குடியை கெடுக்கும்!